திருப்பதியில் தனுஷ் படத்தின் ஷூட்டிங்! பக்தர்களை அலையவிட்ட போலீஸ்
திருப்பதியில் நடிகர் தனுஷின் படத்திற்கான படப்பிடிப்பால் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் போலீஸாருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கி நடிக்கும் 50ஆவது படம் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் அவருடைய 51 ஆவது படத்தின் ஷூட்டிங் அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்தை இயக்குநர் சேகர் கமூலா இயக்குகிறார்.
நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது ஒரு பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.
டிஎன்எஸ் என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதி மலை அடிவாரத்தில் உள்ள அலிபிரி பகுதியில் இன்று காலை தொடங்கியது.
படப்பிடிப்புக்கு எந்த தடையு.ம் ஏற்படக் கூடாது என்பதால் போலீஸார் போக்குவரத்தை மாற்றினர். அதாவது திருப்பதி மலைக்கு சென்று கொண்டிருந்த பேருந்துகள், பக்தர்களின் வாகனங்கள், மேல் திருப்பதியில் உள்ள அர்ச்சகர்கள், வணிகர்கள் உள்ளிட்டோரின் வாகனங்களை ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக திருப்பிவிட்டனர். இந்த பணியில் தனுஷுக்கு பாதுகாப்பு அளிக்க வந்திருந்த பவுன்சர்களும் ஈடுபட்டிருந்தனர்.
இதனால் அந்த குறுகலான ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பக்தர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து வரும் திருப்பதியில் சினிமா படப்பிடிப்பு ஒன்றுக்காக பக்தர்களின் வாகன போக்குவரத்தை மாற்றி பக்தர்களையும் பொதுமக்களையும் அல்லல்படுத்திய போலீஸாரை பலர் கண்டித்தனர்.
பலர் போலீஸாருடன் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அங்கு ஊடகங்கள் குவிந்த நிலையில் மீண்டும் அலிபிரி பாதை வழியாக வாகன போக்குவரத்தை திருப்பி விட்டு போக்குவரத்தை சீர் செய்ய முயற்சி செய்தனர்
பக்தர்களின் வாகனங்கள் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சாலை வழியாக திருப்பிவிடப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து சீரானது.