நாடெங்கும் மரண ஓலம் : தெருவெங்கும் பிணக்குவியல்!
ஈரானில் வலுவடைந்து வரும் போராட்டங்கள் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்திகளை பிடித்துள்ளன. ஒருபுறம் ஈரானின் வன்முறையை ஒடுக்க ட்ரம்ப் கங்கணம் கட்டிக்கொண்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மறுபுறம் தங்களின் சொந்த மக்களை கொன்று போராட்டத்தை ஒடுக்க நடப்பு அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது. இவ்வாறான இக்கட்டான சூழ்நிலையில் நிர்கதியாகி நிற்பது அப்பாவி பொதுமக்கள் தான்.
ஈரானின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட தாக்கமே மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ பிரதான காரணம். ஆனால் ஈரானிய அரசாங்கமோ இந்த போராட்டங்களுக்கு திரைமறைவில் இஸ்ரேலும், அமெரிக்காவும் இருப்பதாக குற்றம் சாட்டுகிறது.

தற்போதுவரை 3000 போராட்டக்கார்கள் மரணமடைந்துள்ளதாக சில அமைப்புகள் தெரிவித்துள்ளன. இருப்பினும் பலி எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதை விட அதிகளவில் இருக்கும் என யூகிக்கப்படுகிறது. மறைமுகமாக பார்த்தால் ஈரான் தங்கள் சொந்த நாட்டு மக்களுக்கு எதிராக ஒரு போரை நடத்தி வருகிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
குடும்பங்கள் அதிக அளவில் பணம் செலுத்தி, தங்கள் அன்புக்குரியவர்களை “ஆட்சி தியாகிகள்” அல்லது “ஆட்சி ஆதரவு போராட்டக்காரர்கள்” என்று அறிவிக்கும் ஆவணங்களில் கையெழுத்திடாவிட்டால், இறந்தவர்களின் உடல்களை விடுவிக்க அதிகாரிகள் மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த விடயமானது தங்களது அன்புக்குரியவர்களை கொல்வதற்கு உறவினர்களே பணம் கொடுத்து தோட்டாக்களை வாங்குவதற்கு ஒப்பானது என பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவை எல்லாம் இணைய முடக்கத்திற்கு பின்னர் கசிந்த சில தகவல்கள் தான். உண்மையில் அங்கு மக்களின் நிலை யூகித்து கூட பார்க்க முடியாத அளவு மோசமாக இருக்கலாம்.
இதற்கிடையே ட்ரம்ப், ஈரான் மக்களுக்கு உதவுவதாக கூறுவது சாதாரண விடயமல்ல. ட்ரம்பின் அறிவிப்பிற்கு பின்னணியில் இருக்கும் விடயங்கள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். ட்ரம்ப் புதிதாக ஆட்சி பீடம் ஏறியதை தொடர்ந்து பல்வேறான அதிரடி நடவடிக்கைகள் மூலம் உலகளாவிய ரீதியில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.

முன்னதாக கனடா அமெரிக்காவின் ஒருங்கிணைந்த மாநிலமாக மாற வேண்டும் என்றார். பின்னர் வெனிசுலாவை ஆக்கிரமித்தார். இஸ்ரேலின் துணையோடு ஈரானின் அணுசக்தி கிடங்குகளை சீண்டி பார்த்தார். தற்போது கிரீன்லாந்தை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இவை எல்லாவற்றிற்கும் ஒரே ஒரு காரணத்தை சொல்கிறார். அதுதான் அமெரிக்காவிற்கே முதலிடம்.
ட்ரம்ப் அரசாங்கத்தின் நடைமுறைகளை பார்க்கும்போது உலகம் அனைத்தும் அமெரிக்காவின் காலடியில் இருக்க வேண்டும் என்ற ஒரு கனவை நோக்கி பயணிக்கின்றாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறு பார்க்கும்போது ஈரானில் ட்ரம்பின் தலையீடு உண்மையில் மக்களுக்கானதா, அல்லது அந்த நாட்டின் வளங்களை சொந்தமாக்கி கொள்ளவா என்ற கேள்வி எழுகிறது.





