ரீ-ட்வீட் செய்தவருக்கு மரண தண்டனை! வெளியான அதிர்ச்சி தகவல்
ஒருவர் பதிவேற்றிய ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து, யூடியூப்பில் கருத்து தெரிவித்ததற்காக சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மனித உரிமை ஆர்வளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
உலகிலேயே அதிகமாக மரண தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்த இடத்தில் உள்ள நாடு சவுதி அரேபியா. இங்கு மதத்திற்கு எதிராக பேசவோ எழுதவோ முடியாது. கொலை, போதை பொருள் கடத்தல் உள்பட பல்வேறு விஷயங்களுக்கு நிச்சயம் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் முகமது நாசர் அல்-காம்டி என்பவர் எக்ஸ் தளத்தில் (டுவிட்டர்) சவுதி அரசுக்கு எதிரான பதிவுகளை தொடர்ந்து மறுபதிவு செய்துள்ளார்.
அத்துடன் யூடியூபில் சவுதி அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அதற்காக அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
முகமது நாசர் அல்-காம்டி என்பவர் மதத்திற்கு எதிராக செயல்பட்டதாகவும், சமூகத்தின் பாதுகாப்பை சீர்குலைத்துவிட்டதாகவும், சவுதி அரேபிய அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்ததாகவும், பட்டத்து இளவரசர் மீது அவதூறாக குற்றம்சாட்டியதாகவும் சவுதி சிறப்பு குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த வழக்கை விசாரித்த குற்றவியல் நீதிபதி, முகமது நாசர் அல்-காம்டிக்கு மரண தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்பை கேட்டு அதிர்ச்சி அடைந்த மனித உரிமை ஆர்வலர்கள கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒருவர் ரிடுவீட் செய்ததற்கெல்லாமா மரண தண்டனை விதிப்பீங்க..எங்க சார் சவுதி அரேபியா போகுது என்று கொதித்தபடி மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆராய்ச்சியாளர் ஜோய் ஷியா கூறினார்.
லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் லினா அல்ஹத்லூல் என்பவர் கூறும் போது “ட்வீட்களுக்காக அல்-காம்டி என்பவருக்கு மரண தண்டனை வழங்கி இருப்பது மிகவும் கொடூரமானது. சவூதியில் அதிகரித்து வரும் ஒடுக்குமுறைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு” என்றார்.
முன்னதாக டாக்டர் பட்டம் பெற்ற மாணவி சல்மா அல்-ஷெஹாப் என்பவருக்கு சவுதி அரேபிய அரசுக்கு எதிராக பேசியதற்காக 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மாணவி தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருவதற்கே கடும் எதிர்ப்பு எழுந்தது. இப்போது ட்வீட்டை மறுட்வீட் செய்ததற்கு மரண தண்டனை என்பது சவுதியில் உள்ள அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு எதிராக செயல்படுவோர் மற்றும் அரசுக்கு எதிராக செயல்படுவோரை ஒடுக்க இதுபோன்ற தண்டனைகள் கைகொடுக்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த முஹம்மது பின் நாசர் அல்-காம்டியின் சகோதரர் சயீத் பின் நாசர் அல்-காம்டி (இங்கிலாந்தில் வசித்த படி சவுதி அரசுக்கு எதிராக பேசி வருபவர்) கூறுகையில், ” இது தவறான தீர்ப்பு. என்னை சவுதி அரேபியாவிற்கு திரும்பி வரவழைப்தற்கான முயற்சிகள் தோற்றுப்போனதால் இப்படி செய்திருக்கிறார்கள்” என்று காட்டமாக கூறினார்.