கூலி திரைப்படமல்ல… ராம் கோபால் வர்மா பதிவு வைரல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படம் நாளை (ஆகஸ்ட் 14) வெளியாகவுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
நீண்ட காலம் கழித்து ஏ சான்றிதழுடன் வெளியாகும் ரஜினிகாந்த் திரைப்படம் என்பதால் படத்தில் இடம்பெற்றுள்ள வன்முறைக் காட்சிகளைக் காண பலரும் ஆவலாக உள்ளனர்.
இந்த நிலையில், பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கூலி ஒரு திரைப்படமல்ல… இது இயக்கம்” எனக் கூறியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன் நேர்காணலில் பேசிய ராம் கோபால், “ஸ்லோமோஷன் காட்சிகள் இல்லையென்றால் ரஜினி இல்லை” எனக் கடுமையாக விமர்சித்திருந்தார்.
அண்மையில், நடிகர் ரஜினிகாந்த் நிகழ்வொன்றில் பேசும்போது, “புத்தகத்தைப் பற்றி பேச கமல்ஹாசன், சிவகுமார் போன்ற அறிவாளிகள் இருக்கும்போது ஸ்லோமோஷனில் நடந்துவரும் என்னை ஏன் அழைத்தார்கள்?” எனச் ‘செல்லமாக’ ராம் கோபாலை அடித்தார்.
தற்போது, ராம் கோபால் வர்மாவின் பதிவு ரஜினி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.