புலிகள் அமைப்பு தொடர்பில் சரச்சைக்குரிய கருத்து!! விஜயகலா மகேஸ்வரன் விடுதலை
2018 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பு தொடர்பில் சரச்சைக்குரிய கருத்தை வெளியிட்டிருந்த சம்பவம் தொடர்பில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. .
இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேகநபருக்கு எதிரான வழக்கை தொடர்வதற்கு போதிய உண்மைகள் இல்லை என சட்டமா அதிபர் அறிவுறுத்தியதாக பொலிஸார் முன்னதாக நீதிமன்றில் அறிவித்திருந்தனர்.
குறித்த முறைப்பாடு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சந்தேகநபர் விஜயகலா மகேஸ்வரன் நீதிமன்றில் முன்னிலையாகினார். சந்தேகநபருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டாம் என சட்டமா அதிபர் தீர்மானித்திருப்பதால், அவரை விடுதலை செய்வதாக நீதவான் கூறினார்.
2018 ஆம் ஆண்டு ஜூலை 02 ஆம் திகதி யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டி எழுப்ப வேண்டும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கூறியதாகக் கூறி கொழும்பு நீதிவான் நீதிமன்றில் கொழும்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த முறைப்பாடு செய்திருந்தனர்.