விஜய்யும் ஷாருக்கானும் இணையும் படம் கன்ஃபார்ம் ஆகிடுச்சு…. “கதை எழுதுறேன்”
விஜய்யும், ஷாருக்கானும் இணையும் படம் குறித்து அட்லீ பேசியிருப்பது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அட்லீ விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இவற்றில் பிகிலை தவிர்த்து மற்ற படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன். சூழல் இப்படி இருக்க ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி பாலிவுட்டிலும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார் அட்லீ.
ஷாருக்கானுடன் நயன் தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. படத்தின் தொழில்நுட்ப கலைஞர்களையும் இங்கிருந்தே அழைத்து சென்றிருந்தார் அட்லீ.
படத்துக்கு தமிழ்நாட்டில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. குறிப்பாக இது பல படங்களின் மூவி மிக்சர் என்ற விமர்சனம் எழுந்தது. அதேசமயம் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அட்லீயின் மேக்கிங்கும், அவர் தொட்டிருந்த கதைக்களமும் பாலிவுட்டுக்கு புதிது என்பதால் அந்த வரவேற்பு கிடைத்ததாக ரசிகர்கள் கூறினர். வசூலிலும் 1000 கோடி ரூபாயை தொட்டது ஜவான்.
ஜவான் படத்தின் வெற்றியால் அட்லீக்கு அடுத்தடுத்து பாலிவுட் வாய்ப்புகள் கிடைக்கும் என்றே பெரும்பாலும் கருதப்படுகிறது. அதிலும் ஜவானுக்கு கிடைத்த பாசிட்டிவ் ரெஸ்பான்ஸால் மீண்டும் அட்லீயுடன் இணைய ஷாருக்கான் முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் தெறி படத்தின் ரீமேக்கையும் பாலிவுட்டில் செய்கிறார் அட்லீ.
இதற்கிடையே ஜவான் படத்தின் ஷூட்டிங் ஒரு ஷெட்யூல் சென்னையில் நடந்தது. அப்போது விஜய் ஜவான் செட்டுக்கு நேரில் சென்று ஷாருக்கானை சந்தித்தார். எனவே அந்தப் படத்தில் விஜய் நடிக்கிறார் என்று அப்போது தகவல்கள் வெளியாகின.
ஆனால் படத்தில் அவர் நடிக்கவில்லை. இருந்தாலும் இருவரும் இணையும் படத்தை இயக்குவேன் என ரிலீஸுக்கு பிறகு அட்லீ தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அட்லீ அவ்வாறு பேட்டியில் சொல்லியதை அடுத்து இருவரும் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருந்தது. இந்நிலையில் விழா ஒன்றில் பங்கேற்ற அட்லீயிடம் விஜய், ஷாருக் இணையும் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “ஆமாம். அந்தப் படத்துக்கான கதையை எழுதிக்கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இரண்டு பேரும் இணையும் படம் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாகவே திரைத்துறையில் பேச்சு எழுந்திருக்கிறது.