கோவை – ஏர் ஹாரன் பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் மனு தாக்கல்
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஏர் ஹாரன் பயன்படுத்தும் தனியார் பேருந்து உரிமையாளர், ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி சட்டக் கல்லூரி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் தனியார் பேருந்துகளில் மக்களை அச்சுறுத்தும் வகையில் பொருத்தப்படும் அதிகளவு ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தடையை மீறி ஏர் ஹாரன் பயன்படுத்தும் தனியார் பேருந்துகளை கண்டறிந்து வட்டா போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து காவலர்கள் அபராதம் விதிப்பதோடு அந்த ஏர் ஹாரன்களை அகற்றி வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையம் அருகே சென்ற தனியார் பேருந்து அதிவேகமாக இயக்கியதோடு, ஏர் ஹாரன் அடித்ததில் முன்னாள் சென்ற இரு சக்கர வாகனம் விபத்தில் சிக்கியது. இதில் கூடலூர் நகராட்சியில் பணியாற்றி வந்த அசோக்குமார் மற்றும் அவரது 3 வயது மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இயக்கப்பட்டு வரும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை சட்டக்கல்லூரி 4 ஆம் ஆண்டு மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
மேலும் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் தனியார் பேருந்து உரிமையாளர் , ஓட்டுநர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தனித்தனியாக ஒவ்வொரு சம்பத்திற்கும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வோம் என தெரிவித்துள்ளனர்.