பிரித்தானியாவில் மாறும் வானிலை : மக்களின் கவனத்திற்கு!
பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு குளிர் காலநிலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையானது வரும் வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை நடைமுறையில் இருக்கும்.
சில பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கிழக்கு அயர்ஷையரின் (East Ayrshire) கம்னாக்கில் (Cumnock) வெப்பநிலையானது -4 பாகை செல்சியஸை எட்டக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்கொட்லாந்தின் பல பகுதிகளில் பனி பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக மலைப்பாங்கான இடங்களில் 10cm வரை பனி பெய்யும்.
இதற்கிடையே மேற்கு மற்றும் கிழக்கு ஸ்காட்லாந்திற்கான தற்போதைய மழை எச்சரிக்கைகள் புதன்கிழமை நள்ளிரவு வரை அமலில் உள்ளன, கனமழை பயண இடையூறுகள் மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகவே மக்கள் தங்களது பயணத் திட்டங்களை மேற்கொள்ளும்போது சீரற்ற வானிலை குறித்து கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.





