பசுமை புரட்சியின் பாதையில் பிரித்தானியா: காற்று–சூரிய மின் திட்டங்களுக்கு பச்சைக்கொடி
பிரித்தானியாவை 2030 ஆம் ஆண்டிற்குள் முழுமையான பசுமை எரிசக்தி நாடாக மாற்றும் நோக்கில், 190 புதிய மின் திட்டங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது.
லேபர் (Labour) அரசாங்கம் பதவியேற்ற பிறகு, புதிய தரைவழி காற்றாலைத் திட்டங்களுக்கு (Onshore Wind) விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது.
இதன் ஒரு பகுதியாக, கடந்த பத்தாண்டுகளில் இல்லாத வகையில் இங்கிலாந்தின் மிகப்பெரிய காற்றாலைத் திட்டம் உட்பட 28 காற்று மின் திட்டங்களுக்கும், 157 சூரிய மின்சக்தித் திட்டங்களுக்கும் தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், சுமார் 1.6 கோடி வீடுகளின் தேவையைப் பூர்த்தி செய்யப் போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் கருத்து தெரிவித்த எரிசக்தி செயலாளர் Ed Miliband, இயற்கை எரிவாயு மூலம் மின்சாரம் தயாரிப்பதை விட, இந்தத் திட்டங்கள் 50 சதவீதத்திற்கும் மேலான குறைந்த செலவில் மின்சாரத்தை வழங்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையின் மூலம் வெளிநாட்டு எரிபொருள் இறக்குமதியைச் சார்ந்து இருப்பதை தவிர்த்து, பிரித்தானியக் குடும்பங்களின் மின்சாரக் கட்டணத்தை நிரந்தரமாகக் குறைக்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.




