ஜி-7 உச்சநிலை மாநாட்டில் உக்ரைன் குறித்து பேசவுள்ள பைடன்
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜி-7 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள இத்தாலி சென்றுள்ளார்.
மாநாட்டில் உக்ரைனுக்கு நிதி உதவி வழங்குவது, ரஷ்யா மீது மேலும் அழுத்தம் தருவது போன்றவை குறித்து அதிபர் பைடன் பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சீனா ரஷ்யாவுக்கு வழங்கும் ஆதரவு குறித்தும் அவர் கவனம் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நிலவரம், சீனாவின் வர்த்தகக் கொள்கை, செயற்கை நுண்ணறிவு உள்ளிட்டவை குறித்து தலைவர்கள் பேசவுள்ளனர்.
மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்கள் அவர்களது நாட்டுப் பிரச்சினைகள் குறித்து மட்டும் பேசாமல் உலக நாடுகளை அச்சுறுத்தும் பிரச்சினை குறித்தும் விவாதிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
ஜி-7 உச்சநிலை மாநாடு ஜூன் 13ஆம் திகதி முதல் ஜூன் 15ஆம் தேதி வரை நடக்கிறது.
பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் சில அரசியல் நெருக்கடிகள் எழுந்துள்ளதால் இந்த மாநாடு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.