கொழும்புக்கு தோள் கொடுக்கும் பீஜிங்! அநுரவிடம் சீன தூதுக்குழு உறுதி!
“ இலங்கைக்கு தேவையான உதவிகளை சீனா நிச்சயம் வழங்கும்.” – என்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20 ஆவது மத்திய குழுவின் உறுப்பினரும், Xizang தன்னாட்சி பிராந்தியத்தின் கம்யூனிஸ்ட் கட்சி குழுவின் செயலாளருமானவாங் ஜுன்செங் உறுதியளித்துள்ளார்.
“ ரீ பில்டிங் ஸ்ரீலங்கா” திட்டத்தில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ளத் தயார் எனவும் அவர் கூறினார்.
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள சீன தூதுக்குழு, ஜனாதபதி அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (23) சந்தித்து பேச்சு நடத்தியது.
அனர்த்த நிலைமையில் இலங்கைக்கு சீனா வழங்கிய அவசர மற்றும் மனிதாபிமான உதவிகளுக்கு இதன் போது ஜனாதிபதி நன்றி தெரிவித்தார். இந்த கடினமான நேரத்தில் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்கிய ஆதரவையும் அவர் பாராட்டினார்.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நெருங்கிய நட்பை மேலும் வலுப்படுத்தும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக்காட்டினார்.
மக்களின் அன்றாட வாழ்க்கையை மீளமைக்கவும் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பவும் தொடங்கப்பட்டுள்ள ரீ பில்டிங் ஸ்ரீலங்கா திட்டம் குறித்து சீனக் குழுவிற்கு ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.
“கிளீன் ஸ்ரீலங்கா திட்டம் மற்றும் இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்புத் திட்டம் போன்ற அரசாங்கத்தின் முதன்மைத் திட்டங்களுக்கு சீனா ஆதரவளிக்கும்.
குறிப்பாக கிராமிய வறுமையை ஒழிப்பதில் சீனாவின் அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்து கொள்ள தேவையான உதவிகளை வழங்கும்.” என்று சீன பிரதிநிதி குறிப்பிட்டார்.
இலங்கைக்கான சீனத் தூதுவர் உட்பட சீன தூதுக்குழுவினரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.
இந்திய வெளிவிவகார அமைச்சரும் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





