இலங்கை செய்தி

மாணவர்களிடம் நிதி சேகரிக்க தடை: வடக்கு ஆளுநர் சுட்டிக்காட்டு!

“பாடசாலைகளில் மாணவர்களிடம் நிதி சேகரிக்கக் கூடாது என இறுக்கமான சுற்றறிக்கை உள்ளது. எனினும், பெற்றோர் அல்லது பழைய மாணவர் சங்கங்களின் பெயரில் மறைமுகமாக நிதி அறவிடப்படுவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.”

இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் Vedhanayakan தெரிவித்தார்.

இத்தகைய முறைகேடான நிதி அறவீடுகளைக் கண்காணித்துத் தடுத்து நிறுத்த வேண்டிய முழுப் பொறுப்பும் கல்வி நிர்வாக அதிகாரிகளையே சாரும் எனவும் அவர் கூறினார்.

வடக்கு மாகாணத்தில் பணியாற்றும் இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளுடனான விசேட கலந்துரையாடல், இன்று (10.02.2026) வடக்கு மாகாண பிரதம செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள் (நிதி, நிர்வாகம்), மாகாணக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும், கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

ஆளுநர் தனது உரையில் கூறியவை வருமாறு,

“ இலங்கையிலேயே 5 மாவட்டங்களைக் கொண்ட ஒரே மாகாண சபை இதுவாகும்.

யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் பல கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் உள்ளன.

அங்குள்ள மாணவர்கள் அந்தந்தக் கிராமப் பாடசாலைகளையே முழுமையாக நம்பியுள்ளனர்.

இலங்கை கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளான நீங்கள், அலுவலகங்களுக்குள் முடங்கி இருக்காது, அடிக்கடி களத்தரிசிப்பு மேற்கொள்ள வேண்டும்.

பாடசாலைகளின் பௌதீக மற்றும் மனித வளக் குறைபாடுகளை நேரில் கண்டு, எமது நிதி ஒதுக்கீடுகள் ஊடாக அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வறுமை காரணமாக எந்தவொரு மாணவனும் கல்வியை இடைநிறுத்தும் நிலை ஏற்படக்கூடாது.

அமைச்சின் சுற்றறிக்கையையும் மீறி, பாடசாலை நிர்வாகங்கள் நிதி அறவீட்டுக்கு புதிய வழிகளைக் கையாள்கின்றன.

பெற்றோரின் பெயரிலோ, பழைய மாணவர் சங்கங்களின் பெயரிலோ அல்லது வெளிநாடுகளிலிருந்தோ நிதிகள் பெறப்படுகின்றன.

யாழ்ப்பாண நகரப் பாடசாலைகள் சிலவற்றில் கூட பெற்றோரிடம் பணம் கோரப்பட்டதாகத் தகவல்கள் உள்ளன.

இவ்வாறு பெறப்படும் நிதிகளுக்கு உரிய கணக்கறிக்கைகளோ, வெளிப்படைத்தன்மையோ இல்லை.

நன்கொடையாகப் பெறப்படும் பொருட்கள் பாடசாலை இருப்புப் பதிவேட்டில் பதியப்படுவதில்லை.

களத் தரிசிப்புக்களின் போது இவற்றைக் கண்காணித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதிபர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுக்காற்று விசாரணைகள் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்படுவதால், அவர்கள் ஓய்வூதியம் பெறமுடியாத நிலை உள்ளது. விசாரணைகளை உரிய காலத்தில் நிறைவு செய்ய வேண்டும்.

அதேவேளை, எதிர்காலத்தில் பதவி உயர்வுகள் வழங்கப்படும்போது, வெறும் பணிமூப்பு மட்டுமன்றி, திறமையையும் அடிப்படையாகக் கொண்டே முன்னுரிமை வழங்கப்படும்.” என்றார்.

 

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!