ஆஸ்திரேலியக் காட்டுத் தீயில் சிங்கப்பூருக்கு ஈடான அளவு நிலப்பரப்பு சேதம்
தேசியப் பூங்கா ஒன்றில் வெகுவேகமாகப் பரவும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தப் போராடுவதாக ஆஸ்திரேலியத் தீயணைப்பாளர்கள் டிசம்பர் 27ஆம் திகதி கூறியுள்ளனர்.
விக்டோரியா மாநிலத்திலுள்ள கிரேம்பியன்ஸ் தேசியப் பூங்காவில் 74,000 ஹெக்டர் நிலப்பரப்பு, ஆகப் பெரிய காட்டுத் தீயால் கருகியது. இது கிட்டத்தட்ட 100,000 காற்பந்துத் திடல்களுக்குச் சமமான நிலப்பரப்பு.
கடந்த வாரம் விக்டோரியா மாநிலத்தின் கிழக்குப் பகுதி கடுமையான காட்டுத் தீச்சம்பவங்களால் பாதிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
கிரேம்பியன்ஸ் தேசியப் பூங்கா மெல்பர்ன் நகரிலிருந்து 240 கிலோமீட்டர் மேற்கே அமைந்துள்ளது.
அங்கு மூண்ட காட்டுத் தீ குறித்து ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கழகத்திடம் பேசிய மாநிலக் கட்டுப்பாட்டு நிலையப் பேச்சாளர், கிட்டத்தட்ட சிங்கப்பூரின் நிலப்பரப்புக்கு ஈடான நிலப்பகுதி பாதிக்கப்பட்டதாகக் கூறினார்.
நிலைமை சற்றே மேம்பட்டுள்ளது. இருப்பினும் தீயை முழுவதுமாக அணைக்கக் கூடுதல் காலம் தேவைப்படும் என்றார் அவர். 360 கிலோமீட்டருக்கும் அதிகமான சுற்றளவு கொண்ட பகுதியில் தீ எரிந்துகொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
இந்தக் காட்டுத் தீச்சம்பவங்களில் யாரும் உயிரிழந்ததாகவோ வீடுகள் சேதமடைந்ததாகவோ தகவல் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.