இந்தோனீசியாவிலிருந்து சிறுமியைக் கடத்தியதாக ஆஸ்திரேலிய நபர் மீது குற்றச்சாட்டு
இந்தோனீசியாவிலிருந்து பாலியல் தொழிலுக்காகப் பதின்ம வயதுப் பெண்ணைக் கடத்தியதாக 43 வயது நபர் மீது ஆஸ்திரேலியக் காவல்துறை, செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) குற்றம் சாட்டியுள்ளது.
இவ்வாறு ஆஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்கு ஆள்சேர்ப்பதாகக் கூறப்படும் பெண் ஒருவர், இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையைக் கடத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
இந்தோனீசியாவிலிருந்து 17 வயதுப் பெண்ணைப் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த ஆஸ்திரேலியா கொண்டுவர ஏற்பாடு செய்ததன் தொடர்பில் சிட்னி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அந்த நபரை விசாரிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலியல் தொழிலுக்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பெண் இந்தோனீசியப் பெண்களை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பியதாகவும் குற்றம் சாட்டப்பட்ட நபர் அவர்களை சிட்னியில் உள்ள விலைமாதர் இல்லங்களில் சேர்த்ததாகவும் இந்தோனீசியாவின் குற்றப் புலனாய்வு அமைப்பு அதிகாரி தெரிவித்தார்.
வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் பாலியல் தொழிலில் ஈடுபடக் கட்டாயப்படுத்தப்படுவதாகத் தகவல் கிடைத்ததை அடுத்து, 2022ஆம் ஆண்டு டிசம்பரில் விசாரணையைத் தொடங்கியதாக ஆஸ்திரேலியக் காவல்துறை கூறியது.
கடந்த மே மாதம் சிட்னியின் மூன்று விலைமாதர் இல்லங்களில் அத்தகைய ஒன்பது பெண்களை அது கண்டுபிடித்தது.
ஆட்கடத்தல் கும்பல் 2019ஆம் ஆண்டு முதல் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இந்தோனீசிய அதிகாரி கூறினார். இந்தோனீசியர்கள் ஏறக்குறைய 50 பேர் இவ்வாறு அனுப்பப்பட்டதாகவும் ஆட்சேர்ப்பாளர் இதன் மூலம் 50 மில்லியன் ($41,488.41) ஈட்டியதாகவும் கூறப்பட்டது.
ஆஸ்திரேலியாவில் கூடுதல் காலம் தங்கி, பாலியல் தொழிலில் ஈடுபட ஏதுவாகச் சில பெண்களை சிட்னி கல்வி நிலையத்தில் மாணவர்கள் எனப் பொய்யாகப் பதிவு செய்த சந்தேகத்தின் பேரில் 35 வயதுப் பெண் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலியக் காவல்துறை கூறியது.