சிறுவர்களுக்கான சமூக வலைத்தளங்களை தடை செய்யும் அவுஸ்ரேலியா!
16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக வலைத்தளங்களை தடை செய்ய அவுஸ்திரேலிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த முன்மொழிவுடன் கூடிய புதிய சட்டங்கள் அடுத்த வாரம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்தார்.
சமூக ஊடகங்கள் மூலம் அவுஸ்திரேலிய குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் இந்த புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
“எங்கள் தந்தை மற்றும் தாய்மார்களுக்கு இது வருத்தமளிக்கிறது, என்னைப் போலவே, அவர்களின் குழந்தைகளும் இணையத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ஆஸ்திரேலிய பெற்றோருக்கு நான் சொல்ல விரும்புகிறேன், அரசாங்கம் உங்களுடன் நிற்கிறது.” என்று பிரதமர் கூறியுள்ளார்.
ஆனால் ஏற்கனவே சமூக வலைதளங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு இந்தத் தடை அமல்படுத்தப்படாது என்று கூறப்படுகிறது.
மேலும், பெற்றோரின் சம்மதத்துடன் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் குழந்தைகளுக்கு இந்தத் தடை பொருந்தாது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இளம் பயனர்களைப் பாதுகாக்கத் தவறும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாகவும் ஆஸ்திரேலியப் பிரதமர் கூறினார்.