காசாவில் ஏற்படவுள்ள மற்றுமொரு பெரும் அவலம் – அவசர உதவி கோரும் அதிகாரிகள்
போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள காசாவை இயற்கையும் தீவிரமாகத் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
காசாவை நோக்கி நெருங்கி வரும் புயல் காரணமாகப் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனவும், பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் எனவும் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாகப் போரினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்துள்ள சுமார் பத்து இலட்சம் மக்கள் சொல்லொணாத் துன்பத்திற்கு முகங்கொடுக்கவுள்ளனர்.
ஏற்படவுள்ள இயற்கையின் சீற்றம் காரணமாக கரையோரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கூடாரங்களைச் சேதப்படுத்தலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டுள்ள மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அவசர உதவிகள் தேவைப்படுவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல் காரணமாகத் தரைமட்டமாகியுள்ள கட்டடச் சிதைவுகள் மலைபோல் குவிந்துள்ளன. சுமார் 15 மில்லியன் தொன் எடையுள்ள சிதைவுகளை அகற்றும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான நிலையில், பாரிய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால், அதனைச் சமாளிப்பது பெரும் சவாலான விடயம் என காசா அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.





