சர்வதேச கடற்பகுதியில் அத்துமீறும் அமெரிக்கா – சர்ச்சையை கிளப்பிய புதிய விடயம்!
சீனாவிலிருந்து ஈரானுக்கு பயணித்த சரக்குக் கப்பல் ஒன்றை அமெரிக்க படைகள் சோதனை செய்துள்ள விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா சமீபகாலங்களில் கடற்பகுதியில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளதை இந்த சம்பவம் பிரதிபலிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) நேற்று வெளியிட்ட அறிக்கையில், சீனாவிலிருந்து ஈரானுக்கு பயணித்த சரக்கு கப்பல்களை அமெரிக்கப் படைகள் தடுத்து நிறுத்தியது இதுவே முதல் முறை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
“ஈரானின் வழக்கமான ஆயுதங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்” பொருட்களை அக்கப்பலில் இருந்து கைப்பற்றியதாக அதிகாரி ஒருவர் மேற்படி பத்திரிக்கைக்கு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கைப்பற்றப்பட்ட பொருட்கள் இரட்டைப் பயன்பாட்டிற்குரியவை என்றும், இராணுவ மற்றும் சிவில் பயன்பாடுகளைக் கொண்டிருக்கலாம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் அமெரிக்க இந்தோ-பசிபிக் கட்டளை இந்த தகவலை உறுதிப்படுத்தவில்லை.





