அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் – கோர்ட் அதிரடி உத்தரவு
இந்த நிலையில் தான் ஒரு வாரத்திற்கு பிறகு அல்லு அஜூனை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். அல்லு அர்ஜூன் மீது பிஎன்எஸ் சட்டப்படி 105, 118(1)r/w3(5) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று சிக்காட்பள்ளி போலீசார் அல்லு அர்ஜூன் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்துள்ளனர்.
இதையடுத்து கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
அல்லு அர்ஜூன் நடித்த புஷ்பா 2 தி ரூல் படம் கடந்த 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியா படமாக உருவான புஷ்பா 2 படம் உலகம் முழுவதும் 12 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்டது.
அதிக எதிர்பார்ப்புகளுடன் திரைக்கு வந்த புஷ்பா 2 படத்திற்கு ஹைதராபாத்தில் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் காரணமாக ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் அளவுக்கு அதிகமான ரசிகர்கள் கூடினர்.
மேலும், அந்த திரையரங்கில் ஓபனிங் ஷோ பார்க்க அல்லு அர்ஜூன் வருகை தந்துள்ளார். அவரை காண்பதற்கும் அதிகமான ரசிகர்கள் கூடினர்.
இந்த நிலையில் தான் ஹைதராபாத்தில் தில்சுக் நகர் பகுதியைச் சேர்ந்த ரேவதி (39) என்ற பெண் தன்னுடைய கணவர் பாஸ்கர் மற்றும் குழந்தைகள் தேஜ் (9) மற்றும் சான்வி (7) ஆகியோருடன் ஆர்டிசி சாலையில் உள்ள சந்தியா தியேட்டருக்கு புஷ்பா 2 படம் பார்க்க வருகை தந்துள்ளார்.
அவர் கட்டுப்படுத்த முடியாத கூட்ட நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்ட போலீசார் துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி ரேவதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அல்லு அர்ஜூன், தியேட்டர் மேனேஜ்மெண்ட் மற்றும் பாதுகாப்பு டீம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர்.