மோசடி வழக்கில் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலின் பெயர்கள்

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால், அதிக லாபத்தை கொடுப்பதாக கூறி, புதுச்சேரியை சேர்ந்த 10 பேரிடம் ரூ. 60 கோடியே 60 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக லாஸ்பேட்டையை சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் அசோகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வீசாரணையை நடத்தி வருகிறார்கள். இதில், கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட கிரிப்டோ கரன்சி நிறுவனம் தான் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த கிரிப்டோ கரன்சி நிறுவனத்தின் நிகழ்ச்சிகளில் நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வால் ஆகியோர் பங்கேற்று, விளம்பரப்படுத்தியதும் தெரியவந்துள்ளது. நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடிகை தமன்னாவிற்கு ரூ. 25 லட்சமும், நடிகை காஜல் அகர்வாலுக்கு ரூ. 18 லட்சமும் அனுப்பப்பட்டுள்ளதும் இந்த விசாரணையில் வெளிவந்துள்ளது.
அதன்படிப்படையில், கிரிப்டோ கரன்சி மோசடி தொடர்பாக நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள காவல் துறையினர், அவர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
கிரிப்டோ கரன்சி மோசடி வழக்கில் நடிகைகள் தமன்னா மற்றும் காஜல் அகர்வாலின் பெயர்கள் அடிபட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.