சிறுவனிடம் சில்மிஷம் செய்த லப்பர் பந்து பட நடிகர் கைது
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/lubber-pandhu-1724846629.avif)
லப்பர் பந்து படத்தில் நடித்த நடிகர் ஒருவர் பூங்காவிற்கு வந்த சிறுவனிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த 16 வயது சிறுவனின் பெற்றோர் ஒருவர் பதறியடித்துக் கொண்டு விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் தனது மகன் விருகம்பாக்கத்தில் உள்ள பூங்காவில் விளையாட சென்றபோது, அங்கு வந்த இளைஞர் ஒருவர் மகனிடம் பேச்சு கொடுத்ததாகவும், பின்னர் ‘ஐ லவ் யூ டா’ தம்பி, நீ அழகா இருக்க என சொல்லி சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து பயந்துபோன அந்த சிறுவன், அழுதுகொண்டே அங்கிருந்து வீட்டுக்கு வந்து தங்களிடம் நடந்ததை கூறியதாகவும் அந்த பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் யார் அந்த இளைஞர் என வலைவீசி தேடி வந்தனர். பின்னர் விருகம்பாக்கம் பூங்காவில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அந்த நபர் மதுரவாயல் பகுதியை சேர்ந்த ஹரி என்பது தெரியவந்தது. பின்னர் உடனடியாக போலீசார் ஹரியை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகின.
ஹரி பிரபல சின்னத்திரை சீரியல்களில் ஜுனியர் ஆர்டிஸ்டாக பணியாற்றி வந்திருக்கிறார். பூங்காவிற்கு வரும் சிறுவர்களை குறிவைத்து, நீ அழகாய் இருக்க… என்னைப்போல் நீயும் பேமஸ் ஆவாய் என பேசி வந்ததும், பின்னர் லவ் பண்ணுவதாக கூறி அவர்களிடம் அத்துமீறி நடந்துகொள்வதை வாடிக்கையாக வைத்திருந்ததும் தெரியவந்துள்ளது. இதேபோல தன்னோடு நடிக்க வரும் பல துணை நடிகைகளோடு உல்லாசமாக இருந்ததாக கூறிய ஹரி, உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் சிறுவர்களிடம் தன் இச்சையை தீர்த்துக் கொள்வதாகவும் விசாரணையில் தெரிவித்துள்ளார்.
சீரியலில் பெரிய ஆளாக வர வேண்டும் என நினைத்த தனக்கு அடக்கமுடியாத ஆசையால் தற்போது அசிங்கப்பட்டு நிற்பதாக அழுதுகொண்டே வாக்குமூலம் அளித்துள்ளார் ஹரி. இதையடுத்து ஹரியின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார் அதில் ஏதேனும் சந்தேகப்படும்படியான செயல்களில் அவர் ஈடுபட்டுள்ளாரா என்பதையும் தீர ஆராய்ந்து வருகின்றனர். கைதான ஹரி லப்பர் பந்து படத்தில் நடித்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பல பிரபலங்களோடு செல்பி எடுத்து அதை பதிவிட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. பெண் குழந்தைகள் மட்டுமின்றி ஆண் குழந்தைகளும் தனக்கு நடப்பவற்றை பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தவறான பாதையில் செல்ல நேரிடும் எனவும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்