திருச்சியில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு தற்கொலை செய்து கொண்ட வாலிபர்
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள தழுதாளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு.கூலி தொழிலாளி இவரது மகன் நவீன்குமார் (17).
திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.
குடும்ப பொருளாதார சூழ்நிலையை கருத்தில் கொண்டு நவீன்குமார், விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு சென்று வருவது வழக்கம். அப்படி லால்குடி பகுதியில் வேலைக்கு சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம், ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த நவீன்குமாரின் பெற்றோர் ‘முதலில் படிப்பில் கவனம் செலுத்து, பிறகு திருமணம் செய்து கொள்வதை பற்றி பேசிக்கொள்ளலாம்’ என்று அறிவுரை கூறியதுடன் கண்டித்ததுள்ளனர்.
தனது குடும்பத்தினர் கண்டித்ததை ஏற்றுக்கொள்ள முடியாத நவீன்குமார் கிராமத்தில் உள்ள அய்யனார் கோவில் அருகே உள்ள ஒரு மரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்யமுடிவு செய்தார்.
பின்னர் கயிற்றுடன் மரத்தில் ஏறி
மரக்கிளையில் நின்று தற்கொலை செய்யப் போவதை கயிறை மாட்டிக் கொண்டு அதனை தனது செல்போனில் செல்ஃபி எடுத்து வாட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைத்துவிட்டு பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நவீன்குமாரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸை பார்த்த அவரது நண்பர்கள் கிராமத்தை சுற்றியுள்ள மரங்களில் தேடி பார்த்துள்ளனர். பின்னர் கோயில் அருகே உள்ள மரத்தில் பிணமாக தொங்கிய நவீன்குமாரை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்த சிறுகனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவீன்குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாட்சப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.