பிணைக்கைதிகள் தொடர்பான தீர்வு விரைவில் எட்டப்படலாம் ; பிரதமர் நெட்டன்யாகு உறுதி
ஹமாஸ் போராளிகளால் பிணை பிடிக்கப்பட்டவர்கள் கூடிய விரைவில் விடுவிக்கப்படக்கூடும் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு பிணைக்கைதிகளின் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பான ஒப்பந்தம் கூடிய விரைவில் கையெழுத்திடப்படும் சாத்தியம் இருப்பதாக அவர் கூறினார்.
காலம் கனிந்து வருவதாகவும் நல்ல அறிகுறிகள் தென்படுவதாகவும் வாஷிங்டனில் இருக்கும் பிரதமர் நெட்டன்யாகு தெரிவித்தார்.
அவர் அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர் உரையாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் பிறகு, அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அடுத்த வாரம் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர் நிறுத்த பேச்சுவார்த்தையை கத்தாரும் எகிப்தும் வழிநடத்தி வருகின்றன.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், இஸ்ரேல் மீது ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர்.இஸ்ரேலுக்குள் அத்துமீறி நுழைந்த ஹமாஸ் போராளிகள், ஏறத்தாழ 1,200 பேரைக் கொன்றனர்.அதுமட்டுமல்லாது. ஏறத்தாழ 250 பேரைப் பிணை பிடித்தனர்.
பிணைக்கைதிகள் பலர் உயிரிழந்து விட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.120 பேர் இன்னும் ஹமாஸ் போராளிகளின் பிடியில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஒரு வார போர் நிறுத்தத்தின்போது 105 பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர்.பதிலுக்கு 240 பாலஸ்தீனக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது