யாழில் சந்தைக்கு துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு!
யாழ்ப்பாணம், மருதனார்மடம் பொதுச் சந்தைக்குள் நபர் ஒருவர் துப்பாக்கியுடன் நடமாடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து சுன்னாகம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
மருதனார்மடம் சந்தைக்கு வந்த நபர் ஒருவர், தனது அடையாளத்தை மறைக்கும் வகையில் தலைக்கவசம் மற்றும் கைகளுக்குக் கையுறைகளை அணிந்திருந்துள்ளார்.
அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் வழமை போல் பச்சை மிளகாயைக் கொள்வனவு செய்த அவர், திடீரென “இந்தச் சந்தைக்குள் வட்டிக்குப் பணம் கொடுப்பவர்கள் யார்?” என்று வினவியுள்ளார்.
அதற்கு அந்த வியாபாரி தமக்குத் தெரியாது எனப் பதிலளித்ததும், அந்த நபர் அங்கிருந்து விரைவாக வெளியேறியுள்ளார்.
அந்த நபர் கையில் வைத்திருந்த பையினுள் ‘ரி – 56’ ரகத் துப்பாக்கி போன்ற ஆயுதம் இருந்ததைச் சில வியாபாரிகள் அவதானித்துள்ளனர். அத்துடன் அவரது இடுப்புப் பகுதியில் கைத்துப்பாக்கி ஒன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை போன்ற தோற்றமும் காணப்பட்டது.
இது குறித்து உடனடியாகச் சுன்னாகம் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சந்தையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கமரா பதிவுகளை சோதனையிட்டு, துப்பாக்கியுடன் வந்த நபர் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அத்துடன், மேற்படி நபர் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் 071-8591331 என்ற தொலைபேசி இலக்கத்துக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.
துப்பாக்கியுடன் வந்த நபர் எதற்காக வட்டிக்குக் காசு கொடுப்பவர்களைத் தேடினார்? அவர் ஏதேனும் ஒரு தாக்குதலுக்குத் திட்டமிட்டிருந்தாரா? என்பது குறித்து பொலிஸார் பல கோணங்களில் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.





