சினிமாவை மிஞ்சும் வெறியாட்டம் – 22 உயிரை காவு வாங்கிய குடும்ப பகை

மதுரையில் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர்கள் தி.மு.க.,வைச் சேர்ந்த வி.கே.குருசாமி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜபாண்டி குடும்பத்தினர் இடையே அரசியலுக்காக துவங்கிய 22 ஆண்டு கால பகையில், இருதரப்பிலும் நேற்று முன்தினம் நடந்த படுகொலையுடன், 22 உயிர்கள் பலியாகி உள்ளன.
சினிமாவை மிஞ்சும் இந்த கொலை வெறியாட்டம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை, மேலஅனுப்பானடியைச் சேர்ந்த, வி.கே.குருசாமியின் சகோதரி மகன் காளீஸ்வரன் என்ற கிளாமர் கார்த்திக், 32, தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் நேற்று முன்தினம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இவர் ஒரு மாதமாக தனக்கன்குளம் பகுதியில் மனைவி மீனாட்சியுடன் வசித்தார். இரு குழந்தைகள் உள்ளனர். இவர் மீது பல வழக்குகள் உள்ளன.
இவரை சிறையில் உள்ள வெள்ளைக்காளி தரப்பு கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில், தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
வி.கே.குருசாமி தரப்புக்கு தற்போது தளபதி போல் செயல்பட்டவர் காளீஸ்வரன்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கரிசல்குளத்தை சேர்ந்தவர் வி.கே.குருசாமி. அதே பகுதி கழுத்தறியான் கிராமத்தை சேர்ந்தவர் ராஜபாண்டி. இருவரும் உறவினர்கள்.
ஒரே காலகட்டத்தில் மதுரை வந்த இரு குடும்பத்தினரும், கீரைத்துறையில் அருகருகே வீடுகளில் வசித்தனர்.
அரசியல் ஆசையால் குருசாமி தி.மு.க.,விலும், ராஜபாண்டி அ.தி.மு.க.,விலும் இணைந்தனர். உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக போஸ்டர் ஒட்டுவதில் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது.
ராஜபாண்டிக்கு உதவியாக இருந்தவர் அவரது அண்ணன் மகன் சின்ன முனீஸ்.
கடந்த 2003ல் குருசாமி தரப்பில் மிரட்டல் விடுத்த போது, மோதல் ஏற்பட்டது. அப்போது காயத்தில் துடித்த முனீஸ், ‘என் உயிரை எடுத்து விடுங்கள். இல்லையென்றால் உங்கள் அனைவரையும் வெட்டிக் கொலை செய்தே தீருவேன்’ என, எச்சரித்தார்.
இதனால் குருசாமி தரப்பு அவரை கொலை செய்தது. இப்படி தான் துவங்கியது பகை.
இந்த பகையில் காளீஸ்வரன் 22வது நபராக கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினார்.