குவைத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இலங்கையர் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை
குவைத்தில் உணவு விநியோகம் செய்யும் சாரதியாக பணிபுரியும் இலங்கையர் ஒருவர், விநியோகத்தை தாமதப்படுத்தியதற்காக வாடிக்கையாளர் ஒருவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
இராஜாங்கனையைச் சேர்ந்த 44 வயதான அவர், குவைத்தில் சுமார் 8 வருடங்களாக வசித்து வருவதாகக் கூறுகிறார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான லக்ஷ்மன் திலகரத்ன தெரிவிக்கையில், கடந்த ஜனவரி 10 ஆம் திகதி இந்தச் சம்பவம் நடந்ததாக கூறினார்.
வாடிக்கையாளர் வழங்கிய ஆரம்ப இருப்பிட விபரங்கள் தவறாக இருந்தன. இதன் காரணமாக வேறு இடத்துக்குச் செல்ல வேண்டியிருந்தது.
எவ்வாறாயினும் அவருக்கான உணவு விநியோகம் தாமதமானதால் குறித்த வாடிக்கையாளர் தன்மீது துப்பாக்கிச் பிரயோகம் நடத்தியதாக தெரிவித்தார்.
இதன் காரணமாக வயிற்றில் பலத்த காயங்கள் ஏற்பட்டு அந்தக் காயங்களில் இருந்து இரத்தம் வழிந்த நிலையில் தனது காரைச் செலுத்திச் சென்று இந்திய நண்பரின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதியாகியுள்ளார்.
10 மற்றும் 13 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையான திலகரத்ன, தான் எதிர்கொண்ட கொடூரமான சம்பவத்துக்கு நீதி கிடைக்கவும், தன்னை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.