அறிமுகமாகும் OpenAI SORA – இனி கணப்பொழுதில் வீடியோ உருவாக்கலாம்
OpenAI நிறுவனத்தின் அடுத்த படைப்பாக Sora என்ற புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் நீங்கள் என்ன Text உள்ளிடுகிறீர்களோ அதற்கு ஏற்றவரான ஒரு நிமிட வீடியோவை உடனடியாக உருவாக்கிக் கொடுத்துவிடும்.
இந்த புதிய செயற்கை நுண்ணறிவு மாடல் குறித்து, தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள OpenAI CEO சாம் அல்ட்மேன், “Sora AI என்ன செய்யும் என்பதை நாங்கள் உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறோம். நீங்கள் எதுபோன்ற காணொளிகளைப் பார்க்க விரும்புகிறீர்களோ அந்த டெக்ஸ்ட்டை இதில் உள்ளீடு செய்தால் போதும், உடனடியாக அதற்குரிய காணொளியை இது உருவாக்கத் தொடங்கிவிடும்” எனப் பதிவிட்டிருந்தார்.
மேலும் இந்த மாடல் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட சில காணொளிகளையும் அவர் பதிவிட்டிருந்தார். அவை பார்ப்பதற்கு மிகவும் எதார்த்தமாக இருந்தது. இதே போல மேலும் சில பயனர்களும் Sora AI பயன்படுத்தி உருவாக்கிய காணொளிகளை ட்விட்டரில் பகிர்ந்திருந்தனர்.
ஒரே நேரத்தில் பல கதாபாத்திரங்களை, துல்லியமாக இந்த செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தால் உருவாக்க முடியும் என சொல்லப்படுகிறது. இது நாம் என்ன சொல்கிறோம் என்பதைப் புரிந்து கொள்வது மட்டுமில்லாமல், நிஜ உலகில் உள்ள காட்சிகளை அப்படியே பிரதிபலிக்கிறது. ஒரே நேரத்தில் இந்தத் தொழில்நுட்பத்தால் பல வீடியோ காட்சிகளை உருவாக்க முடியும். அது நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் துல்லியமாக இருக்கும் என OpenAI நிறுவனம் கூறுகிறது.
இன்று காலையிலிருந்தே Sora-வைப் பலரும் உற்சாகமாகப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். இந்தத் தொழில்நுட்பத்தின் திறன் சந்தேகத்திற்கு இடமின்றி ஈர்க்கும்படியாகவே உள்ளது. இருப்பினும் Text-ஐ பயன்படுத்தி ஒரு நிமிட வீடியோவை சிரமமின்றி உருவாக்கும் மாடலிடம் நாம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் முக்கியம். ஏனெனில் இதை எளிதில் தவறாகப் பயன்படுத்தி விடலாம்.
குறிப்பாக, மற்றவரின் அனுமதியின்றி DeepFake காணொளிகளை இதுபோன்ற தொழில்நுட்பங்களின் உதவியுடன் செய்ய முடியும் என்பதால், நாம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டியது அவசியம். OpenAI நிறுவனம் தரப்பில், Sora-வை யாரும் தவறாகப் பயன்படுத்தாத வகையில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.