மச்சங்களும் அதன் அர்த்தங்களும்…!!
உடலில் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மச்சங்கள் இருப்பது ஒரு தனித்துவமான அடையாளமாக பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மச்சங்கள் பிறரை ஈர்க்கும் தன்மை உடையதாகவும் பார்க்கப்படும். இந்த மச்சங்கள், சில சமயங்களில், ஒருவரின் ஆளுமையை மேம்படுத்தவும் உதவுகிறது. ஆன்மிக நம்பிக்கைகளின் படி, மச்சங்கள் நமது முன் ஜென்மத்தின் அடையாளம் என பார்க்கப்படுகிறது. முந்தைய ஜென்மத்தில் நாம் செய்த கர்ம வினைகளின் பலனாக இந்த மச்சங்கள் நமது உடலில் இடம் பெற்றிருக்குமாம். இவை எந்த இடத்தில் இருக்கிறது என்பதை பொறுத்து, அதற்கான அர்த்தங்களும் வேறு படுமாம். சாமுத்ரிக சாஸ்திரத்தின்படி, உடலில் உள்ள மச்சத்தின் அளவு, நிறம் மற்றும் இருக்கும் இடத்திற்கும் ஏற்றவாறு ஒவ்வொரு அர்த்தம் இருக்கிறது. உங்களுக்கு முகத்தில் இருக்கும் மச்சம் குறித்தும் அதற்கான அர்த்தம் குறித்தும் தெரிந்து கொள்வோமா?
உதட்டில் மச்சம் இருந்தால் என்ன அர்த்தம்?
முகத்தில் இருப்பதிலேயே மிகவும் சிறிய, அழகான பகுதி உதடுதான். கீழ் உதட்டில் ஒரு மச்சம் இருந்தால் அவர் சாப்பிட எடுத்துக்கொள்ளும் உணவுகளில் கவனம் கொள்ள வேண்டும் என்று அர்த்தமாம். இது, எடை அதிகரிக்கும் மற்றும் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போக்கைக் குறிப்பதாகவும் உள்ளது. உதட்டருகில் இருக்கும் மச்சங்கள், அப்படி மச்சம் இருக்கும் நபர் பிறர் மீது அதிக அன்பு வைத்திருப்பார் என்றும் குறிப்பிடப்படுகிறது.
நெற்றியில் மச்சம்:
நெற்றிக்கு நடுவில் மச்சம் இருந்தால் அது அவரின் அறிவு மற்றும் அமைதியையும் தெளிவையும் குறிப்பவையாக இருக்கிறதாம். மேலும், இவர்கள் கடின உழைப்பாளாகவும் இருப்பர்களாம். தலையின் ஏதாவது ஒரு முனையில் மச்சம் இருந்தால், அது அவர்கள் தனக்கு பிடித்தவரை திருமணம் செய்வதற்கு அர்த்தமாக இருக்கலாம். அதே மச்சம் இடது புற தலை பகுதியில் இருந்தால், அது நல்ல உடல் நலனுக்கு அர்த்தமாக இருக்குமாம்.
புருவத்தில் மச்சம்:
புருவங்களின் நடுவில் உள்ள மச்சங்கள் தலைமைப் பண்புகளைக் குறிப்பதாக உள்ளன. இவர்கள், புகழ் மற்றும் நிதி செழிப்புக்கு உரிதானவராக இருப்பர். இருப்பினும், இடது பக்கத்தில் ஒரு மச்சம் ஒரு கோழைத்தனமான இயல்பு மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் சிரமங்களைக் குறிப்பதாக உள்ளது. அதே நேரத்தில் வலது பக்க புருவத்தில் உள்ள மச்சம், ஆரோக்கியமான குழந்தைகளுடன் வளமான வாழ்க்கை வாழ்வதை குறிக்கிறது.
கண் மச்சம்:
கண்களை, ஆன்மாவின் ஜன்னல்கள் என்று கூறுவோம்.வலது கண்ணில் ஒரு மச்சம் இருந்தால் நேர்மை, கடின உழைப்பு மற்றும் நம்பகத்தன்மையைக் குறிக்கிறது, அதே சமயம் இடதுபுறத்தில் ஒரு மச்சம் இருந்தால் அது ஆணவம் மற்றும் அவநம்பிக்கைக்கான அறிகுரியாக பார்க்கப்படுகிறது.
மூக்கு மச்சங்கள்:
மூக்கின் நுனியில் இருக்கும் மச்சங்கள், ஒருவரின் முடிவெடுக்கத்தெரியாத தன்மையை குறிக்கிறது. வலது பக்கத்தில் மச்சம் இருந்தால் அது பண வரவை குறிக்கிறது. இடது புறத்தில் இருக்கும் மச்சம், அசுபமான சூழலை குறிக்கிறது. மூக்கிற்கு கீழ் மச்சம் இருந்தால், அவரை நோக்கி எதிர் பாலினத்தினர் ஈர்க்கப்படுவர் என கூறப்படுகிறது.
கன்னத்தில் மச்சங்கள்:
இடது கன்னத்தில் ஒரு மச்சம் இருந்தால் அது அமைதியான நபரை குறிப்பதாக உள்ளது. அவர், குறுகிய மனநிலை மற்றும் ஆடம்பரமான செலவு பழக்கத்தை கொண்டவராகவும் இருக்கலாம். வலது கன்னத்தில் ஒரு மச்சம் இருந்தால் அவர் ஆளுமை திறன் கொண்டவராக இருப்பார்களாம். மேலும், இவர்கள் நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்ப சிந்திப்பவர்களாகவும் இருப்பார்களாம்.
காது மச்சங்கள்:
காதுகளில் உள்ள மச்சங்கள், நமது புலன்களுக்கு ஒருங்கிணைந்தவையாக உள்ளன. மச்சம் உள்ள காதின் எந்தப் பகுதியும் ஆடம்பர வாழ்க்கையின் குறிகாட்டியாகக் பார்க்கப்படுகிறது. காதுக்கு மேல் மச்சம் உள்ளவர்கள், அறிவுப்பூர்வமாக இருப்பார்களாம்.