அயோத்தி குடமுழுக்கு விழா: முதல் ஆளாக வந்த நடிகர் ரஜினிகாந்த்!
அயோத்தி ராமர் கோயில் குடமுழுக்கு விழாவைக் காண முதல் ஆளாக நடிகர் ரஜினிகாந்த் அமர்ந்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் குடமுழுக்கு விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் கடந்த 11 நாட்களாக விரதம் இருந்து வருகிறார். பிரம்ம முகூர்த்தத்தில் கண்விழிக்கும் அவர் உணவாக பழங்களை மட்டுமே எடுத்து கொண்டதோடு, இளநீர் பருகினார்.
மேலும் மரக்கட்டிலில் போர்வை விரித்து தூங்கினார். நாடு முழுவதும் உள்ள ராமாயணம் தொடர்புடைய இடங்களுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். இந்த விரதத்தைத் தொடர்ந்து ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் இன்று பங்கேற்க உள்ளார்.
அதன்படி பிரதமர் மோடி இன்று காலை அயோத்தி விமான நிலையம் வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் காலை 10.55 மணிக்கு ஸ்ரீராமஜென்ம பூமிக்கு வருகிறார்.அதன்பிறகு மதியம் 12.05 மணிக்கு ராமர் கோயிலுக்குள் வருகிறார். இதையடுத்து கும்பாபிஷேக விழா தொடங்கி நடைபெற உள்ளது. மதியம் 12.30 முதல் 12.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் துறவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் நேற்று அயோத்தி சென்றார்.
இன்று அங்கு நடைபெறும் குடமுழுக்கு விழாவைக் காண முதல் ஆளாக ரஜினிகாந்த் அங்கு இருக்கையில் அமர்ந்துள்ளார். இந்த வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.