Apple Vision Pro முன்பதிவு – 20 நிமிடத்தில் விற்றுத் தீர்ந்தது
ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Vision Pro தொழில்நுட்பம் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முன்பதிவு ஆரம்பிக்கப்பட்டு 18 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்ததாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆப்பிளின் புதிய மிக்ஸ்டு ரியாலிட்டி (Mixed Reality) தொழில்நுட்பமான இந்த விசன் ப்ரோ சிலிர்ப்பூட்டும் மெய்நிகர் அனுபவங்களை அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
எதிர்வரும் பெப்ரவரி 2ஆம் திகதியிலிருந்து பயனாளர்கள் அவர்களது Vision Proவை பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சிலருக்கு தாமதமாக கிடைக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தலையில் அணிந்துகொள்ளக் கூடிய இந்த கருவி மூலம், அதி தெளிவான காணொலிகளைக் காணமுடியும். ஒரு 4கே தொலைக்காட்சியை விட அதிக பிக்சல்களைக் கொண்டுள்ளது.
ஏற்கனவே இதுபோன்ற ஹெட்செட்கள் அறிமுகமாகியிருந்தாலும், ஆப்பிள் நிறுவனத்தின் தரத்தில், புதிய அம்சங்களுடன் இந்த தொழில்நுட்பம் எப்படி இயங்குகிறது எனக் காண மக்கள் பெரும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.
இதில் டிஸ்னி+, அமேசான் பிரைம், பாரமவுன்ட்+ போன்ற தளங்களில் உள்ள படங்களைக் காணலாம் எனவும், யூடியூப், நெட்பிளிக்ஸ் போன்ற தளங்களை நேரடியாக பயன்படுத்த முடியாது எனவும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.
60,000 முதல் 80,000 விசன் ப்ரோ ஹெட்செட்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக 3 லட்சம் ரூபாயாக (3,499 டாலர்கள்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது.