குளிர்காலத்தில் அதிகரிக்கும் மாரடைப்பு! ஆபத்தில் சிக்கும் இளைஞர்கள்
குளிர்காலத்தில் பல தொற்றுநோய்கள், காய்ச்சல், சளி, வைரஸ் தொற்று உள்ளிட்ட பல உடல்நல பிரச்னைகள் ஏற்படும். புதுடெல்லியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் குளிர்காலம், மோசமான வாழ்வியல் முறை ஆகியவற்றின் காரணமாக குளிர்காலத்தில் மாரடைப்பு பாதிப்பிற்கு சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் மாரடைப்பு:
புது டெல்லியில் உள்ள மேக்ஸ் ஹாஸ்பிடல்ஸ் இதய ஆரோக்கிய நிபுணர் பால்பிர் சிங் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், நாட்டில் இதய பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. அதுவும் குளிர்காலத்தில் இதயம் தொடர்பாக பாதிப்புகள் அதிகரிப்பதை எங்கள் மருத்துவமனைக்கு வரும் நபர்களை வைத்தே சொல்லிவிடலாம். சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு பேர் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற வருகின்றனர்.
மருத்துமனையில் நிகழ்பவைகளில் இருந்து பார்த்தால் 2023ம் ஆண்டு மே- ஜூன் மாதங்களில் இதய பாதிப்பிற்காக சிகிச்சைக்கு வந்தவர்களின் எண்ணிக்கை குறைவு. குளிர்காலம் தொடங்கியவுடன் அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதனாலேயே குளிர்காலத்தில் மாரடைப்பு தொடர்பான பிரச்னைகள் அதிகரித்துள்ளதாக குறிப்பிடுகிறேன்.” என்று சூழல் குறித்து விளக்கம் அளித்தார்.
குளிர்காலத்தில் அதிக பாதிப்பு:
இதய பாதிப்புகளுக்கு சிகிச்சைக்கு வருவோரில் இளைஞர்களும் இருப்பதாக பால்பிர் சிங் தெரிவிக்கிறார். ”கடந்த மாதம் 26-வயதுள்ள பெண் ஒருவருக்கு நான் சிகிச்சையளித்தேன். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. என் அனுபவத்தில் இவ்வளவு இளம் வயதில் அதுவும் பெண்ணுக்கு மாரடைப்பு ஏற்பட்டதில்லை. என்னிடம் சிகிச்சைக்கு வந்தவர் புகைப்பழக்கம் கூட இல்லை. ஆனால், அவருக்கு மன அழுத்தம் அதிகமாக இருந்தது. இளம் வயதில் இருப்பவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். உடல்நல கோளாறு ஏதாவது ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.” என்று அவர் அறிவுரை கூறினார்.
குளிர்காலத்தில் உடல்நலனை பேணுவது குறித்து பால்பிர் சிங் கூறுகையில், “குளிர்காலத்தில் உடல்நல கோளாறுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம். உடலுக்கு தேவையான வெப்பம் கிடைக்காது. உடலின் வெப்பநிலை குறைவதால் அது ஹார்ட் ரேட் மற்றும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இரத்த அழுத்தத்தில் ஏற்படும் சிறிய மாறுதல்கள் மாரடைப்பு ஏற்பட காரணமாக அமைந்துவிடும்.” என்று எச்சரிக்கிறார்.
தண்ணீர்:
குளிர்காலத்தில் ஏற்படும் காற்று மாசுபாடும் இதற்கு ஒரு காரணம். மேலும், குளிர்காலங்களில் தேவையான அளவு தண்ணீர் அருந்த மறந்துவிடுவோம். தண்ணீர் தாகம் குறைவாக இருக்கும். ஆனாலும், ஒரு நாளைக்கு உடலுக்கு தேவையான தண்ணீரை குடிக்க வேண்டும் என்று பல்பிர் சிங் பரிந்துரைக்கிறார். மேலும், புகைப்பழக்கம் மது அருந்துவது ஆகியவற்றிற்கு நோ சொல்ல வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்.