ஜப்பானை உலுக்கிய விமான விபத்து – விசாரணைகள் ஆரம்பம்
தோக்கியோவில் ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்துடன் ஜப்பானியக் கடலோரக் காவற்படை விமானம் மோதியுள்ளது.
இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடலோரக் காவற்படை விமானத்தில் இருந்த 6 ஊழியர்களில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்த 379 பயணிகளும் சிப்பந்திகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 14 பயணிகளுக்குச் சிறுகாயங்கள் ஏற்பட்டதாக ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.
புத்தாண்டு முதல் நாளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண உதவியை வழங்கக் கடலோரக் காவற்படை விமானம் சென்றுகொண்டிருந்தது.
பயணிகளை வெளியேற்ற எடுத்துக்கொண்ட நேரத்தை விமானத்துறை வல்லுநர்களும் பயணிகளும் பாராட்டினர். விமானத்திலிருந்து அனைவரும் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 10 நிமிடங்களில் மேலும் ஒரு வெடிப்புச் சத்தம் கேட்டதாகப் பயணிகள் கூறினர்.
வெளியேற்றுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால் உயிருக்கு ஆபத்தாக முடிந்திருக்கலாம் என அவர்கள் தெரிவித்தனர். சிப்பந்திகள் விமானம் தரையிறங்குவதற்கான உத்தரவைப் பெற்றதாகக் கூறினர்.
ஜப்பானியப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம், காவல்துறை உள்ளிட்ட இதர பிரிவுகள் விசாரணையை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டது.