9 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் செயல்பட தொடங்கியுள்ள லிபியா பங்குச்சந்தை…
லிபியா பங்குச்சந்தை நேற்றிலிருந்து வர்த்தகத்தை தொடங்கியது. ஒன்பது ஆண்டுகளாக செயல்படாமல் முடங்கிக் கிடந்த லிபியா ஷேர் மார்க்கெட் இப்போது மீண்டும் வர்த்தகத்தை தொடங்கியதால் அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக லிபியா பங்குச் சந்தை கடந்த 9 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் லிபியா பிரதமர் அப்துல் ஹமீது அல்-டெபய்பாவும், பங்குச்சந்தை இயக்குநர்களின் வாரியத் தலைவர் பஷீர் முகமது அஷௌரும் இணைந்து நாட்டின் தலைநகரான திரிபோலியில் உள்ள பங்குசந்தையில் மணியடித்து நேற்று வர்த்தகத்தை மீண்டும் தொடங்கி வைத்தனர்.
லிபியாவின் இரண்டாவது பெரிய நகரமான பெங்காஸியில் பங்கு சந்தைக்கு மற்றொரு வர்த்தக அரங்கு உள்ளது. அதில் அடுத்த வாரம் முதல் வர்த்தகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. “நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான வழிகளில் ஒன்று பங்குச்சந்தை. உள்நாட்டு மொத்த உற்பத்தியை இரட்டிப்பு ஆக்குதல், பட்ஜெட் பற்றாக்குறையை ஈடு செய்தல், அரசின் பொது பட்ஜெட்டில் விழும் பளுவைக் குறைப்பது ஆகியவற்றுக்கு பங்குச்சந்தை முக்கிய இடத்தை வகிக்கிறது.
அரசின் பல்வேறு துறைகளின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மை பங்குச்சந்தையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. சந்தையில் பட்டியலிடுவதற்கு நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் மூலம் பங்குச்சந்தை சிறப்பாகச் செயல்படும்” என்று பிரதமர் அப்துல்ஹமீது அல்-டெபய்பா கூறியுள்ளார்.
நாட்டில் உள்ள 10 பெரிய நிறுவனங்களில் எட்டு நிறுவனங்கள் நேற்றைய வர்த்தக ஷெட்யூலில் சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே வர்த்தகத்தில் ஈடுபட்டன என்று பங்குச்சந்தை நிபுணர் லாமின் ஹமன் கூறினார்.
லிபியாவில் 2006ம் ஆண்டில் பங்குச் சந்தை தொடங்கப்பட்டது. முந்தைய அதிபர் கடாஃபி வீழ்ந்த பிறகு நேட்டோ ஆதரவு புரட்சி 2011ம் ஆண்டில் லிபியாவில் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து 12 மாதங்களுக்கு மேலாக வர்த்தகம் ரத்து செய்யப்பட்டது. 2014ம் ஆண்டில் ஆயுதக்குழுக்களிடையே ஏற்பட்ட உள்நாட்டு போரைத் தொடர்ந்து வர்த்தகம் மீண்டு ரத்து செய்யப்பட்டது. தற்போதும் கூட லிபியாவில் அடிக்கடி உள்நாட்டு கலவரங்கள் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.