டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டுவெடிப்பு: இஸ்ரேலியர்களுக்கு அரசு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
டெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்ததைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் இஸ்ரேலியர்களுக்கு அந்நாட்டு அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
டெல்லி சாணக்கியபுரி பகுதியில் இஸ்ரேல் நாட்டு தூதரகம் அமைந்துள்ளது. இந்த இடத்தின் அருகே நேற்று மாலை குண்டு வெடித்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. மேலும் சம்பவ இடத்திலிருந்து விஷமிகள் எழுதிய கடிதம் ஒன்றையும் அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் இஸ்ரேல் தூதரகம் மீது குறி வைக்கப்பட்டதாக இருக்கலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் வசிக்கும் இஸ்ரேலியர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இந்தியாவில் வசிக்கும் இஸ்ரேலியர்களுக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பில், “இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் வசிக்கும் இஸ்ரேலியர்கள் மால்கள், சந்தைகள் போன்ற நெரிசலான இடங்களுக்கு செல்ல வேண்டாம். இஸ்ரேலிய மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கும் செல்ல வேண்டாம். மிகுந்த எச்சரிக்கையுடனும் இஸ்ரேலிய குறியீடுகளை வெளியில் அடையாளப்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
#दिल्ली: दिल्ली स्पेशल सेल कल कथित विस्फोट के बाद #इज़राइल दूतावास के क्षेत्र की जांच करने पहुंची। #LatestNews #Trending #Viralvideo #IsraelEmbassy pic.twitter.com/nwg8R8ckIg
— Nedrick News (@nedricknews) December 27, 2023
நேற்று மாலை இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததுமே டெல்லி குற்றப்பிரிவு பொலிஸா சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். மேலும், வெடிகுண்டு தடுப்பு பிரிவினரும் அங்கு வந்து விசாரணை நடத்தினர். மோப்ப நாய் கொண்டு பரிசோதனை செய்யப்பட்டது. விஷமிகள் எழுதியதாக கைப்பற்றப்பட்ட கடிதம் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சாணக்கியபுரியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.