மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்
தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு மாகாண பெண்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் ஆகியோருக்கு மகஜரொன்றையும் கையளித்தனர்.
குறித்த மகஜரில்,இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பு இன்மையே இங்கு வாழ்கின்ற மக்கள் என்ற ரீதியில் தொடர்ச்சியாக நாங்கள் எதிர் நோக்கி வருகின்றோம் குறிப்பாக நீரியல்வளங்கள்,நிலவளங்கள், சுற்றாடல் போன்ற வள பகிர்வுகளில் அரசாங்கம் மற்றும் மக்களுக்கு இடையிலே உள்ள சமூக ஒப்பந்தம் மீறப்படுவதுடன் அதன் மூலம் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றது.
அதிலும் வட பகுதியில் தேசிய பாதுகாப்பு என்ற ரீதியில் மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை மற்றும் காணி அபகரிப்பு, இராணுவமயமாக்கல், இராணுவ சோதனை தடுப்பு அரண்கள்,மக்கள் மீள்குடியேற்றப்படாமை போன்றவற்றால் இங்கு வாழ்கின்ற மக்களாகிய நாம் பெரும் சவாலையே எதிர்நோக்கின்றோம்.
தற்காலத்தில் பொருட்களின் விலை அதிகரிப்பு,எரிபொருட்களின் விலைஅதிகரிப்பு, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை,இந்திய இழுவை மடி எமதுகடற்பரபில் மீன்பிடியில் ஈடுபடுகின்றமை,பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரம், போதைப்பொருள் பாவனை,சமூர்த்தி கொடுப்பனவுகள் சரியான முறையில் கிடைக்கபெறாமை போன்ற சாவால்களையும் மக்களாகிய நாம் எதிர்நோக்குவதுடன் நாட்டின் பொருளாதார கொள்கை,நாட்டின் புதிய சட்ட மற்றும் சட்ட மூலங்கள் சர்தேச உடன்படிக்கைகள் மூலம் வட பகுதி மக்களாகிய நாம் பல இன்னல்களை எதிர் நோக்கின்றோம்.
அதிலும் நாட்டின் முதலீட்டை அதிகரித்தல் என்ற ரீதியில் மக்களின் கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்படாமல் மக்களின் எதிர்ப்பையும் மீறி சில திட்டங்கள் நடைபெறுகின்றது நடைபெற உள்ளது மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி,விடத்தல்தீவு இறால் பண்ணை,கனிய மண் அகழ்வு கிளிநொச்சி மாவட்டத்தில் கடல் அட்டைப்பண்ணை, பொன்னாவெளி கிராம டோக்கியோ சீமேந்து தொழிற்ச்சாலை திட்டம் யாழ்ப்பாண மாவட்டத்தில் மயிலிட்டி துறைமுக அபிவிருத்தி அத்துடன் நாட்டின் நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றசெயற்பாடுகளும் நடைபெறுகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட குருந்தூர் மலைவிவகாரம், திட்டமிட்ட மாகாவலி குடியேற்றங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தையிட்டி திஸ்ஸ விகாரை போன்ற பல்வேறு பிரச்சனைகளை வட மாகாண பெண்கள் என்ற ரீதியில் எதிர்நோக்குகின்றோம் ஆகவே வட மாகாண பெண்கள் குரல் என்ற ரீதியில் மேற்கூறப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதனுடன் மனித உரிமைகள் பாதுகாக்க வேண்டும் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோள். – என்றுள்ளது.