2 நாட்களாக மீட்கப்படாத ஆண் சடலம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்டதைக் யாரும் கவனிக்காத அவலம்!
சென்னை வியாசர்பாடி அருகே வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட ஆண் சடலம் இரண்டு நாட்களாக மீட்கப்படாமல் நீரில் மிதந்து வருவது பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த ஞாயிறு முதல் பெய்த கனமழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகளில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நகரின் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் 3 நாள்களாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் உணவு, குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் நகரின் பல்வேறு இடங்களில் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், மழை குறைந்ததை தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை காலை முதல் மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு வருகின்றனர். மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு கனமழை வெள்ளம் காரணமாக சென்னையில் இதுவரை 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், வடசென்னை பகுதியான வியாசர்பாடியில் மழை வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது. இந்த பகுதிக்கு வெள்ள நீரில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் ஒன்று அடித்து வரப்பட்டது. கடந்த இரண்டு நாட்களாக அந்த சடலம் தண்ணீரில் மிதக்கிறது.
இதனை மாநகராட்சி அதிகாரிகள் இதுவரை மீட்காமல் உள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஏற்கெனவே வெள்ள நீரில் சாக்கடை நீர் கலந்து சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் என்று மக்கள் அஞ்சி வருகின்றனர். இந்நிலையில், இந்த சடலத்தால் நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் புகார் கூறுகின்றனர்.இதனால், அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த சடலத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.