பிரதீப்பால் பிக்பாஸில் இருந்து வெளியேற முடிவெடுத்த கமல்ஹாசன்?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருக்கும் கமல்ஹாசன், இந்நிகழ்ச்சியை விட்டு விலக முடிவெடுத்த தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் தான். அவர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதம் மற்றும் மக்களின் பிரதிநிதியாக அவர் நடந்துகொள்வது அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதன் காரணமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொடர்ந்து 7 சீசன்களையும் அவரே தொகுத்து வழங்கி வருகிறார். இதற்காக அவருக்கு சுமார் ரூ.100 கோடிக்கு மேல் சம்பளமும் வாரி வழங்கப்படுகிறது.
பிக்பாஸ் வீட்டில் தப்பு நடந்தால் தட்டிக் கேட்கும் உரிமை கமலுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. ஒரு வேளை அது பெரிய பிரச்சனையாக இருந்தால், அந்த குறிப்பிட்ட போட்டியாளரை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றும் உரிமையும் கமலுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது.
அதனைப் பயன்படுத்தி அவர் இதுவரை கடந்த 6 சீசன்களில் ஒரே ஒரு போட்டியாளரை மட்டுமே வெளியே அனுப்பி இருக்கிறார். அவர் வேறுயாருமில்லை நடிகர் மகத் தான். இரண்டாவது சீசனில் டேனியலை தாக்கியதற்காக மகத்துக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த சீசனில் அசீமுக்கு ரெட் கார்டு கொடுத்துவிடுவேன் என பயம்காட்டிய கமல், அதனை பயன்படுத்தவில்லை. ஆனால் இந்த சீசனில் பிரதீப் பெண்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும், அவரால் இந்த வீட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை கருத்தில் கொண்டும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி இருக்கிறார் கமல், இந்த முடிவை அவர் மட்டும் எடுக்கவில்லை, போட்டியாளர்கள் மற்றும் சேனல் நிர்வாகத்திடம் கேட்டு தான் இந்த முடிவுக்கு வந்ததாக கமல் கூறினார்.
அதோடு, பிரதீப் செய்த வேலைகளை பார்த்து கடுப்பான கமல்ஹாசன், அவரை நீக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சேனல் நிர்வாகத்திடம் முன்வைக்க செல்லும் முன், ஒரு வேளை அவர்கள் பிரதீப்பை வெளியேற்ற வேண்டாம் என சொல்லிவிட்டால், தான் இந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிடலாம் என முடிவெடுத்து சென்றாராம்.
ஆனால் சேனல் நிர்வாகமும் தன்னைப்போலவே பெண்களின் பாதுகாப்பு தான் முக்கியம் எனக்கூறியது என்னை இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பயணிக்க வைத்துள்ளது என கமல்ஹாசனே நேற்றைய எபிசோடில் ஓப்பனாக பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது