ஷாருக்கானின் பிறந்தநாள் ட்ரீட்.. இனி கொண்டாட்டம்தான்
ஷாருக்கானின் 58ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜவான் திரைப்படம் ரிலீஸாகியிருக்கிறது.
அட்லீ முதன்முதலாக ஹிந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். அதில் நயன் தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்திருந்தார். ஷாருக்கானே படத்தை தயாரிக்கவும் செய்திருந்தார்.

ஷாருக்கானின் நடிப்பில் ஜவானுக்கு முன்னதாக வெளியான பதான் படம் ஆயிரம் கோடி ரூபாயை வசூலித்தது. எனவே இந்தப் படமும் ஆயிரம் கோடி ரூபாயை வசூலிக்க வேண்டும் என ஷாருக்கின் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள்.
அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக உலகம் முழுவதும் 1000 கோடி ரூபாய்க்கும் மேல் ஜவான் படம் வசூலித்திருக்கிறது. இது வேறு எந்த இந்திய படமும் செய்யாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

வசூல் ரீதியாக ஜவான் படம் சிக்சர் அடித்தாலும் விமர்சன ரீதியாக அவுட் ஆனது. அதிலும் தமிழ் ரசிகர்கள் ஜவான் படத்தை கழுவி கழுவி ஊற்றினார்கள். எப்போதும் வேறு படங்களிலிருந்து அட்லீ காப்பி அடிப்பார் ஆனால் இதில் தன்னுடைய முந்தைய படங்களிலிருந்தே காப்பி அடித்திருக்கிறார் என்று தமிழ்நாட்டு ரசிகர்கள் ஓபனாக பேச ஆரம்பித்தனர்.
ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான பதான், ஜவான் ஆகிய இரண்டு படங்களுமே 1000 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் சூழலில் இன்று அவர் தனது 58ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் முதல் ரசிகர்கள்வரை அனைவரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர்.

இதற்கிடையே ஷாருக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு ஜவான் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி ஜவான் திரைப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியிருக்கிறது.






