காசாவில் இருந்து வெளியேற பொது மக்களுக்கு உத்தரவு ; ஐ.நா கண்டனம்
காசாவில் இருந்து பொதுமக்கள் 24 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ள நிலையில் இது மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எதிரான செயல் என்று ஐக்கிய நாடுகள் சபை கணடனம் தெரிவித்துள்ளது.
காசா முனையில் இருந்து செயல்படும் ஆயுத ஏந்திய ஹமாஸ் இயக்கத்தினர் கடந்த வார இறுதியில் இஸ்ரேலுக்குள் ஊடுருவி நடத்திய கொடூர தாக்குதல்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் வரலாற்றிலேயே இல்லாத வகையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு பதிலடியாக காசா பகுதிகளில் இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்தன. 7-வது நாளாக நீடிக்கும் தாக்குதலில் இரு தரப்பிலும் 4,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் இயக்கத்தை அடியோடு ஒழிக்க உறுதி எடுத்துள்ள இஸ்ரேல் எல்லையில் ஆயிரக்கணக்கான துருப்புகளை நிறுத்தியுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் வடக்கு காசாவில் உள்ள சுமார் 11 லட்ச பொதுமக்களும் 24 மணி நேரத்தில் வெளியேறி தெற்கு பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இதனால் காசாவுக்குள் இஸ்ரேல் தனிப்படைகள் உடனடியாக நுழைந்து தாக்குதல் நடத்துவது உறுதியாகி இருப்பதாக பாலஸ்தீனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனிடையே காசாவில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்ற இஸ்ரேல் ராணுவத்தின் உத்தரவுக்கு ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது. போரினால் ஏற்கனேவே 4 லட்சத்துக்கு அதிகமானோர் காசாவில் இருந்து வெளியேறிய நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் எச்சரிக்கை மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எதிரான செயல் என்று ஐ.நா. பொதுச்செயலரின் செய்தி தொடர்பாளர் விமர்சித்துள்ளார்.
இதனிடையே ஹமாஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பின்னணியில் சிரியாவில் இயங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு இருக்கிறது என்றும் அதற்கான ஆதாரம் உள்ளதாகவும் இஸ்ரேல் தூதர் கூறியுள்ளார். இதன் அடிப்படையில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் அல்லபூர் விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் குண்டு வீச்சு நடத்தியுள்ளது. பதிலுக்கு சிரியாவும் இஸ்ரேல் மீது தாக்குதலை தொடங்கியுள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் ஹமாஸ் போரால் உலக பொருளாதாரம் பெரும் சிக்கலை சந்திக்கும் என்று உலக வங்கி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனிடையே ஹமாஸ் இயக்கத்தினர் பணய கைதிகளாக பிடித்து வைத்திருந்த 250 இஸ்ரேலியர்களை இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக இறங்கி உயிருடன் மீட்டுள்ளது. கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் இயக்கத்தினர் கட்டுப்பாட்டுக்குள் சென்ற ராணுவ தளத்தில் 250 இஸ்ரேலியர்கள் பணய கைதிகளாக அடைக்கப்பட்டு இருந்தனர். அங்கு சென்ற இஸ்ரேலின் சிறப்பு ராணுவ பிரிவினர் அந்த ராணுவ தளத்தை மீட்டதோடு ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்த 60 பேரை சுட்டு கொன்றனர். 26 பேரை கைது செய்துள்ளனர். ஹமாஸ் இயக்கத்தின் துணை கமாண்டர் முகமது அபு அலியும் கைது செய்யப்பட்டுள்ளார். ராணுவ தளத்தை மீட்ட விடியோவை இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.