லண்டனில் இருந்து 4 ஆண்டுக்கு பிறகு நாடு திரும்பும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்
இஸ்லாமபாத்: பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் 4 ஆண்டுகளாக லண்டனில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த நிலையில் அவர் பாகிஸ்தான் திரும்ப உள்ளார்.
வரும் 21ம் தேதி துபாயில் இருந்து அவர் பாகிஸ்தான் திரும்புகிறார்.
‛உம்மின் இ பாகிஸ்தான்’ எனும் விமானத்தில் அவர் நாடு திரும்புகிறார் என பாகிஸ்தானின் ஜியோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் செயல்பட்டு வந்த நிலையில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் அவரது ஆட்சி கடந்த ஆண்டு கவிழ்ந்தது.
இந்நிலையில் பாகிஸ்தானில் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. நவாஸ் ஷெரீப்பின் எதிர்க்கட்சியாக இம்ரான் கான் உள்ளார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இத்தகைய சூழலில் தான் நவாஸ் ஷெரீப் நாடு திரும்புகிறார். இதனால் அவரது வருகை என்பது அந்த கட்சியினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.