இஸ்ரேலில் இறந்த இலங்கைப் பெண்ணின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை: தூதுவர்
இஸ்ரேல் மோதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் இலங்கை பெண்ணின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை என இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் இன்று தெரிவித்துள்ளார் என ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
“சனிக்கிழமை காலை இஸ்ரேலில் நடந்த வன்முறையின் போது திருமதி அனுலா ரத்நாயக்க என்ற பெண் இறந்தார் என்பதை அவரது உறவினர்கள் உறுதிப்படுத்திய போதிலும், சடலம் அடையாளம் காணப்பட்டு உறுதிசெய்யப்பட்ட பின்னரே உறுதிப்படுத்த முடியும்” என்று தூதுவர் நலின் பண்டார தெரிவித்துள்ளார்.
“எனவே அதுவரை சம்பந்தப்பட்ட நபர் காணாமல் போனவர் என அறியப்படுகிறார்” என தூதுவர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
அந்தந்த பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காண உதவுமாறு இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறினார்.
“இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் இராணுவ நடவடிக்கைகள் இருப்பதால், அந்தப் பகுதியை இராணுவம் பாதுகாத்த பின்னரே, பரிசோதனை மற்றும் அடையாள நோக்கத்திற்கான அணுகலைப் பெறுவோம்,” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.