வரலாறு காணாத அளவுக்குக் குறைந்த அண்டார்ட்டிகாவைச் சுற்றிய பனிப்படலங்கள்!
அண்டார்ட்டிகாவைச் சுற்றிய பனிப்படலங்கள் வரலாறு காணாத அளவுக்குக் குறைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.
துணைக்கோளத் தரவுகள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளன. மார்ச் மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை அண்டார்ட்டிகாவில் குளிர்காலம். அப்போது பனிப்படலங்கள் உருவாகும்.
இப்போது அண்டார்ட்டிகா பெருங்கடலில் மிதக்கும் பனிக்கட்டிகள் 17 மில்லியன் சதுர கிலோமீட்டருக்கும் குறைவாகியுள்ளது. பொதுவாக செப்டம்பர் மாத சராசரியைவிட அது 1.5 மில்லியன் சதுர கிலோமீட்டர் குறைவடைந்துள்ளது.
அண்டார்ட்டிகாவின் பனிப்படலங்கள் உலகைக் குளிர்விக்கின்றன. அவை இல்லை என்றால் உலகம் வெப்பமாகலாம் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
பனிப்படலங்கள் குறைந்ததற்கான காரணத்தை விஞ்ஞானிகள் இன்னமும் ஆராய்கின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பெருங்கடல்கள் வெப்பமடைந்தது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.
ஒரு காலத்தில் அந்தப் பகுதி உலக வெப்பமயமாதலால் பாதிக்கப்படாது என்று எண்ணப்பட்டது. அண்டார்ட்டிகா நிலை இழந்தால் உலகிற்கு மோசமான விளைவுகள் ஏற்படலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.