லியோ ஆடியோ லாஞ்ச் நடக்காதா?.. பரபரக்கும் தகவல்கள்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா திட்டமிட்டபடி நடக்குமா என்பதில் கேள்வி எழுந்துள்ளது.
இந்த மாத இறுதியில் செப்டம்பர் 30-ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் இதுவரை, தயாரிப்பு தரப்பிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.
இந்நிலையில், லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவே நடைபெறாது என செய்யாறு பாலு உள்ளிட்ட சிலர் பரபரப்பு தகவல்களை பற்ற வைத்துள்ளனர். அதற்கு காரணம் சமீபத்தில் நடந்த ஏ. ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் நடந்த குளறுபடிகள் தான் என்கின்றனர்.
வாரிசு திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதே ரசிகர்களுக்கும் போலீசுக்கும் இடையே மிகப்பெரிய வாக்குவாதங்கள் நடைபெற்றன. காசு கொடுத்து டிக்கெட் வாங்கிய சில ரசிகர்கள், இசை வெளியீட்டு விழாவுக்கு செல்ல முடியாத சூழல் உருவானது.
இந்நிலையில் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றால், அசம்பாவிதங்கள் ஏதாவது ஏற்பட்டுவிட்டால் லியோ திரைப்படத்திற்கு மிகப்பெரிய சிக்கலாக அது மாறிவிடும் என்றும் அதன் காரணமாக லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடிகர் விஜய் வேண்டாம் என்றே கூறி விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்களை பரப்பி வருகின்றனர்.
ஆனால், இது முழுக்க முழுக்க பொய்யான தகவல் என்றும் திட்டமிட்டபடி படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெறும் என நெருங்கிய வட்டாரங்கள் உறுதியான தகவல்களை கொடுத்துள்ளன.
தயாரிப்பாளர் லலித் குமார் லியோ படத்தை பெரிய அளவில் புரமோஷன் செய்து பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமாக மாற்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் எனக் கூறுகின்றனர். அடுத்த மாதம் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள லியோ திரைப்படத்திற்கு சென்சார் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைகளையும் தீர்க்கும் முயற்சியில் லலித் குமார் தீவிரமாக செயல்பட்டு வருகிறாராம். வட இந்தியாவில் லியோ படத்தை பெரியளவில் பிசினஸ் செய்யும் ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.