அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமையை கோரி நடைப்பயணம் செய்த இலங்கையர்!
தனது குடும்பத்திற்கு நிரந்தர குடியுரிமையை கோரி நடைப்பயணம் மேற்கொண்ட இலங்கையருக்கு நிரந்தர குடியுரிமையை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நீல் பாரா, அவரது மனைவி மற்றும் மூன்று மகள்கள் 2008 இல் இலங்கையில் உள்நாட்டுப் போரில் இருந்து அகதியாக அவுஸ்திரேலியா சென்றனர்.
ஒன்பது ஆண்டுகளுக்கும் மேலாக விக்டோரியாவின் பிராந்திய நகரமான பல்லராட்டில் வேலை செய்யவோ அல்லது படிக்கவோ அல்லது மருத்துவ உதவி பெறவோ எந்த உரிமையும் இல்லாமல் வாழ்ந்தனர்.
இவர் கடந்த ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி தான் உட்பட அனைத்து அகதிகளுக்கும் அவுஸ்திரேலிய குடியுரிமை வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தி 1,000 கிலோமீட்டர் நடைப்பயணத்தைத் தொடங்கினார்.
விக்டோரியா மாகாணத்தில் இருந்து ஆரம்பமான அவரது நடைப்பயணத்தின் இறுதி இலக்கு, சிட்னி பிரதமர் அலுவலகத்தில் அவுஸ்திரேலிய பிரதமரைச் சந்திப்பதாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இருப்பினும், நீல் தனது இலக்கை அடைவதற்கு முன்பே, அவருக்கு குடியுரிமை வழங்கப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, ஏறக்குறைய 09 வருடங்களாக வீசா எதுவுமின்றி அந்நாட்டில் தங்கியிருந்த நீல் பாரா, அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகளுக்கு அவுஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை வழங்கப்படவுள்ளது.
குடும்பத்தின் குடிவரவு வழக்கறிஞர் கரினா ஃபோர்டு, பாராவின் நடைப்பயணத்தின் முடிவில் குடும்பத்திற்கு விசா வழங்கப்பட்டதாகக் கூறினார்.