மன்னார் நகர பேருந்து நிலையத்தின் கட்டிட தொகுதியில் சமுதாய சீர்கேடுகள் -மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கம் விசனம்
மன்னார் நகர பேருந்து நிலையத்தின் மேல் மாடி கட்டிட தொகுதியில் தொடர்ச்சியாக சமுதாய சீர்கேடுகள் இடம்பெற்று வருகின்ற போதும் உரிய அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கவில்லை என மன்னார் மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கம் விசனம் தெரிவித்துள்ளது.
இவ்விடயம் குறித்து மன்னார் மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்கம் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(21) மன்னார் நகர சபையின் செயலாளருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,மன்னார் நகர பேருந்து நிலையத்தின் மேல்மாடி கட்டிடத் தொகுதியில் பாடசாலை மாணவர்கள்,ஏனையவர்கள் பாலியல் நடவடிக்கை களிலும்,மது போதையை தூண்டும் வகையில் நடந்து கொள்ளுகிறார்கள்.
கடந்த காலத்தில் குறித்த பேருந்து நிலையத்தில் கடமைக்காக பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்ட மையினால் குறித்த சம்பவம் இல்லாது காணப்பட்டது.ஆனால் தற்போது பாடசாலை மாணவர்கள்,எனையவர்கள் அவ்விடத்தில் மிகவும் மோசமாக நடந்து கொள்ளுகிறார்கள்.
எனவே இவ்விடத்தில் உரிய அதிகாரிகள் தலையிட்டு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு சமுதாய சீர்கேட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த கடிதத்தின் பிரதிகள் மன்னார் நீதிமன்ற பதிவாளர்,மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி,மற்றும் தள்ளாடி 53 வது படைப் பிரிவு அதிகாரி ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.