சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்; கலவரத்தில் ஈடுபட்ட 667 பேர் கைது
17 வயது சிறுவன் பொலிஸாரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸில் கலவரம் வெடித்த நிலையில் 667 பேர் வரை கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள நாண்டெர்ரே என்ற புறநகர் பகுதியில் நெயில் எம் என்ற 17வயது சிறுவன் பொலிஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டம் வன்முறையாக வெடித்ததை தொடர்ந்து நாடு முழுவதும் உயரடுக்கு வீரர்கள் மற்றும் GIGN குழுக்களை சேர்ந்த 40,000 பொலிஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் நேற்று உட்படுத்தப்பட்டனர்.தலைநகர் பாரிஸில் மட்டும் 9000 பேருக்கு எதிராக 5000 பொலிஸார்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் நேற்று இரவு பிரான்ஸின் சில நகரங்களில் பொலிஸாருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 667 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 14 வயது முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட மூன்று நாட்களாக நடைபெற்று வரும் கலவரத்தில் 249 பொலிஸார் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பிரஸ்ஸல்ஸில் நடைபெற இருந்த கூட்டத்திற்கு செல்லும் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு, நாட்டில் நிலவி வரும் நெருக்கடி நிலையை கட்டுபடுத்துவதற்கான அவசர கூட்டத்தை இன்று நடத்தவுள்ளார்.