உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு – EPF வைப்புத்தொகையின் வட்டி தொடர்பில் வெளியான தகவல்
உள்நாட்டு கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகள் காரணமாக EPF வைப்புத்தொகைக்கு செலுத்தப்படும் 09% வட்டி பாதிக்கப்படாது என்றும் EPF வைப்புக்கள் கைப்பற்றப்பட மாட்டாது என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் நிதி அமைச்சர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்தார்.
இன்று (29) முற்பகல் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், 57 மில்லியன் வைப்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுமென உறுதியளித்தார்.
அதேபோல், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு செயல்முறையிலிருந்து வங்கி அமைப்பு விடுவிக்கப்படுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வங்கி அமைப்பு ஏற்கனவே வரிகள் மூலம் திறைசேரிக்கும் பொருளாதாரத்திற்கும் 50% க்கும் அதிகமான பங்களிப்பை வழங்குகிறது என்று மத்திய வங்கியின் ஆளுனர் நிதி அமைச்சர் நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல், உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புச் செயல்முறையின் கீழ், மத்திய வங்கியின் பிடியில் இருக்கும் திறைச்சேரி உண்டிகள் மாத்திரம் 12.4% புதிய வட்டி வீதத்துடன் 2024 வரையிலும், 7.5% வட்டி வீதத்துடன் 2026 வரையிலும், மற்றும் 5% வட்டி வீதத்துடன் முதிர்வு வரையிலும் திறைச்சேரி பத்திரங்களாக மாற்றப்படும் என்று மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.