பருவநிலை மாற்றத்தால் மற்றுமொரு ஆபத்து – சமாளிக்கத் தயாராகும் உலகச் சுகாதார நிறுவனம்
El Nino பருவநிலையால் டெங்கு, ஸிக்கா போன்ற நோய்ப்பரவலை எதிர்கொள்ள உலகச் சுகாதார நிறுவனம் தயாராகி வருகின்றது.
மூவாண்டுகளாகத் தொடர்ந்த La Nina பருவநிலையை அடுத்து El Nino திரும்பியுள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் அது வானிலையை மோசமாக்கக்கூடும்.
சூறாவளி, பலத்த மழை, வறட்சி போன்றவை ஏற்படக்கூடும் என்று கூறப்படுகிறது. கொசுக்கள் மூலம் பரவும் கிருமிகளைச் சமாளிக்க உலகச் சுகாதார நிறுவனம் கடந்த ஆண்டு உலகளாவிய இயக்கமொன்றைத் தொடங்கியது.
பருவநிலை மாற்றம் கொசுப் பெருக்கத்தை அதிகரிப்பதாக அது எச்சரித்தது. அண்மை ஆண்டுகளில் டெங்கியால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக வட, தென் அமெரிக்காவில் அது கூடியுள்ளது. ஏடிஸ் கொசுக்கள் கடிப்பதால் டெங்கி நோய் பரவுகிறது. அது காய்ச்சல், வாந்தி, மயக்கம் முதலியவற்றை ஏற்படுத்தலாம்.
COVID-19 நோய்க்கு எதிராக உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகளையே டெங்கி போன்ற மற்ற நோய்களுக்கும் பின்பற்றலாம் என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் கேப்ரியேசஸ் தெரிவித்தார்.
டெங்கியைச் சமாளிக்க உதவும் நடவடிக்கைகள் மற்ற பல நோய்களைத் தவிர்க்கவும் கைகொடுக்கும் என்றும் அவர் கூறினார்.