தீவிரமடையும் உக்ரைன் போர்! அணு ஆயுதங்களை குவித்த ரஷ்யா: உலக நாடுகள் அதிர்ச்சி
உக்ரைன் போரில் தேவைப்படும்போது பயன்படுத்த ஏதுவாக முதல் தொகுதி அணு ஆயுதங்கள் நட்பு நாடான பெலாரஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் புடின் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஒன்றரை ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது. அண்மையில், ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதியில் இருந்த முக்கிய அணையான கக்கோவ்காவை ரஷ்ய படைகள் குண்டு வீசி தகர்த்தது. இதற்கு உக்ரைன் டிரோன் தாக்குதல் மூலம் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில் ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பொருளாதார கூட்டமைப்பில் உரையாற்றிய அதிபர் புடின், ‘முதல் தொகுதி அணு ஆயுதங்கள் நட்பு நாடான பெலாரஸுக்கு அனுப்பிவைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.
இப்போதைக்கு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். ரஷ்யாவின் பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் வரும்போது மட்டுமே இது பயன்படுத்தப்படும். முழு ஆயுதங்களையும் இந்தக் கோடை முடிவதற்குள் அனுப்பிவைப்போம். பெலாரஸுக்கு அணு ஆயுதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது ஒருவித எச்சரிக்கை. அவர்கள் ரஷ்யாவை தோற்கடிக்க முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளட்டும்’ என்றார்.
இதுபற்றி பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ கூறுகையில், ‘ரஷ்யாவின் அணுகுண்டுகள் ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் நடந்த தாக்குதலைவிட மூன்று மடங்கு சக்தி வாய்ந்தவை’ என்று கூறினார். உக்ரைன் மீதான போரில் ரஷ்யா முதன்முறையாக அணு ஆயுதங்களை பெலாரஸூக்கு அனுப்பி வைத்துள்ளது உலக நாடுகள் மத்தியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.