இந்திய அரசின் மீது ட்விட்டரிட் முன்னால் CEO முன்வைத்துள்ள குற்றச்சாட்டு
இந்திய அரசு குறிப்பிட்ட கணக்குகளை முடக்க வலியுறுத்தியதுடன் ட்விட்டர் நிறுவனத்தையே மூடிவிடுவதாகவும் மிரட்டல் விடுத்ததாக அதன் நிறுவனர்களில் ஒருவரான ஜாக் டோர்சி அம்பலப்படுத்தியுள்ளார்.
குறித்த குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ள இந்திய அரசாங்கம், அப்பட்டமான பொய் எனவும் குறிப்பிட்டுள்ளது. 2021ல் ட்விட்டர் நிறுவனத்தின் செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார் ஜாக் டோர்சி,
திங்களன்று(12) கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வேளாண் மக்களின் ட்விட்டர் கணக்குகளை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளதுடன், இந்த விவகாரத்தில் இந்திய அரசாங்கத்துடன் ஒத்துழைக்க மறுத்தால் கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என மிரட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் ட்விட்டர் செயல்பாடுகளை முடக்கி, நிறுவனத்தை மூட வைப்போம் என அரசாங்கம் சார்பில் மிரட்டல் விடுத்துள்ளதாக ஜாக் டோர்சி அம்பலப்படுத்தியுள்ளார்.அதுமட்டுமின்றி, ஊழியர்களின் வீடுகளில் அரசாங்க அதிகாரிகள் சோதனை இடுவார்கள் என மிரட்டியதாகவும் குறிப்பிட்ட அவர், ‘இந்தியா ஒரு ஜனநாயக நாடு தானே’ என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.
பொதுவாக பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் ஒன்லைன் தணிக்கையில் ஈடுபடுவதை பலமுறை மறுத்து வந்துள்ள நிலையில், தற்போது ஜாக் டோர்சியின் கருத்தை அப்பட்டமான பொய் என குறிப்பிட்டுள்ளது.
டோர்சியின் ட்விட்டர் நிர்வாகத்திற்கு இந்திய சட்டத்தின் இறையாண்மையை ஏற்பதில் சிக்கல் இருந்தது என அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் பதில் அளித்துள்ளார்.