பிளவுப்படும் நேட்டோ கூட்டணி : துருப்புகளை குறைக்கும் ட்ரம்ப்!
நேட்டோ கட்டளை மையங்களில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
வொஷிங்டனின் இந்த நடவடிக்கையால் ஐரோப்பிய நாடுகள் மத்தியில் பாதுகாப்பு குறித்த அச்சுறுத்தல்கள் கணிசமாக அதிகரிப்பதாகவும், நேட்டோ கூட்டணியில் விரிசல் ஏற்படும் எனவும் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
புதிய தகவலின்படி, நேட்டோவின் இராணுவ மற்றும் உளவுத்துறை நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் உயரதிகாரிகளில் 200 பேர் வரை நீக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட நேட்டோ புலனாய்வு இணைவு மையம் மற்றும் பிரஸ்ஸல்ஸில் உள்ள நேச நாட்டு சிறப்பு நடவடிக்கைப் படை கட்டளை ஆகியவை இதில் அடங்கும் என நன்கறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடல்சார் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் போர்ச்சுகலை தளமாகக் கொண்ட ஸ்ட்ரிக்ஃபோர் நேட்டோவும் (STRIKFORNATO) இதில் உள்ளடங்குவதாக கூறப்படுகிறது.
நேட்டோ உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க அமெரிக்கா ஏன் முடிவெடுத்துள்ளது என்பது தொடர்பில் அவ் வட்டாரங்கள் எவ்வித தகவல்களையும் பகிர்ந்துக்கொள்ளவில்லை.
இருப்பினும் ட்ரம்பின் இந்த நடவடிக்கை துருப்புக்களை ஆர்ட்டிக் பிராந்தியத்தை நோக்கி நகர்த்தும் திட்டத்துடன் ஒத்துப்போவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





